Monday, 19 January 2009

நம்பலாமா நாடி ஜோதிடத்தை -பகுதி 2


சின்னக் குழந்தையாய் இருந்த போது ஒரு மேஜிக் நிபுன‌ர் சீட்டுக் க‌ட்டிலிருந்து நாம் நினைத்த‌ கார்டைக் கொண்டு வ‌ந்தாலோ, தொப்பியிலிருந்து புறாவை வ‌ர‌வ‌ழைத்தாலோ அவ‌ரைக் க‌ட‌வுள் மாதிரி பார்த்திருப்போம், அவ‌ருக்கு மாயாஜால‌ ச‌க்தி இருப்ப‌தாக‌வே நம்பியிருப்போம், ந‌ம்ப‌ விரும்பியும் இருப்போம்.

வ‌ளர்ந்து ஆளாகிய‌ பிற‌கு அதைப் பார்த்து அதிச‌ய‌ப்போம் , விய‌ப்போம் ஆனால் நாம் க‌ன்டுபிடிக்க‌ முடியாத வ‌கையில் த‌ந்திர‌மாக‌ செய்கிறார்க‌ள் என்போமே த‌விர‌ அவ‌ரை மாய‌வியாக‌ப் பார்க்க‌மாட்டோம்.

நாடி ஜோதிட‌மும் இதே போன்ற‌ த‌ந்திர‌ம் தான். நான் புரிந்து கொண்டிருக்கும் வரையில் நாடி ஜோதிட‌ம் ஒரு உளவியல் விளையாட்டே !

ந‌ம‌து வ‌ச‌திக்காக‌ ஜோதிடம் பார்க்க‌ வ‌ருகிற‌வ‌ர்க‌ளை இனிமேல் க‌ஸ்ட‌ம‌ர்க‌ள் என‌ அழைக்க‌லாம்.

உங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்க வேண்டிய "விதி" இருந்தால் மட்டுமே அதை நாடி வருவீர்கள் என்றும் அப்படியே வந்தாலும் உங்களுக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே உங்கள் "ஏடு" கைக்கு வரும் என்றும் கலவரப்படுத்துவார்கள்.

இது ஒரு டெக்னிக்.

ஏடு கிடைக்காவிட்டாலே ஏதோ பெரிய கெட்டதோ என்று நினைக்கும் நிலைக்குக் கஸ்டமரைக் கொண்டு வருவதற்கே இந்தப் பீடிகை.

நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில் எதிர்காலத்திலாவது நல்லது நடக்குமா என்று தெரிந்து ஆறுதல் அடைய வேன்டியே "கஸ்டமர்கள்" ஜோதிடத்தை/"நாடி" சோதிடத்தை நாடுகிறார்கள்.

தனக்கு நல்ல நேரம் தொடங்கியாச்சு என்று அறிய விரும்பும் அவர்கள் சோதிடர்களுக்கு முழு ஒத்தழைப்புடன் நேர்மறையான பதில்களைத் தருவதற்கே விரும்புவார்கள்.

இதை நாடுபவர்கள் கேள்வி கேட்காம‌ல் ந‌ம்ப‌ விரும்புவார்க‌ள். த‌ன்னைப் ப‌ற்றி சில‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே எழுதியிருகிறார்க‌ளே என்ற‌ மலைத்துப் போய்விடுவது கூட அத‌ற்குக் கார‌ன‌மாக‌ இருக்க‌லாம்.

ப‌ழைய‌ கால‌த்து ஓலையில் அதுவும் வ‌ட்டெழுத்தில் அந்தக் காலத் தமிழ் பாடாலாக இருப்பதைப் ப‌டிப்பார்க‌ள். அதைப் பார்த்த‌துமே ,கொஞ்சம் நம்பியும் நம்பாமலும் இருப்பவர்கள் கூட சே...சே... இது க‌ண்டிப்பாக "பிராடு" ஆக‌ இருக்காது என்று நினைத்து விடுவார்க‌ள்.

நாடி ஜோதிட‌ர்க‌ள் பெரும்பாலும் உங்க‌ள் பெயர் , பெற்றோர் பெய‌ர், உங்க‌ள் தொழில் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துச் சொல்லி விடுவார்க‌ள்.

நேர‌டியாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ள் சொல்லாவிட்டாலும் இந்த‌ப் பொதுப்ப‌டை விடைக‌ளே க‌ஸ்ட‌ம‌ர்க‌ளுக்குப் போதுமான‌தாக‌ இருக்கிற‌து.

உதார‌ன‌த்துக்கு ஆனைமுக‌ன் த‌ம்பி பெய‌ருடையான் என்று சோதிட‌ர் ப‌டிக்கும் போதே ஆமா அப்பா பேரு கார்திகேய‌ன் தான் என்று வாக்குமூல‌ம் தந்து விடுவார்க‌ள்.

எது எப்படியோ அவர்கள் ஆனைமுகன் தம்பி என்று எப்படியோ கண்டு பிடித்து விடுகிறார்களே என்று நீங்கள் நினைக்கலாம்.

அங்கே தான் அவர்களின் டிரிக் அதாவது தொழில் நுட்பம் வேலை செய்கிறது.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொற்றொடர்களைப் படித்து உங்களுக்கு தெரியாமலே உங்களிடம் விடை பெறுகிறார்கள் என்பதே உண்மை.

"ஆனைமுகன் தம்பியவன் அருந்தவப் புதல்வர்
இவர் காவிரி கரையோர‌ம் தான் வ‌ள‌ர்ந்த‌ த‌வ‌ப் புத‌ல்வரிவர்
உட‌ன் பிற‌ந்தோர் இவருக்கு இருவ‌ருண்டு
இரும்புத் தொழில் த‌ன்னை இனிதாகச் செய்திடுவார்"
என்ற‌ ரீதியில் இன்னும் கூட‌ ப‌ழ‌மையான‌ பாட்டுத் தமிழில் ப‌டிப்பார்க‌ள்.

இங்கே அவ‌ர்க‌ளுக்கு வேண்டுவ‌து ஒரே வ‌ரிக்காவ‌து ச‌ரி என்ற‌ ப‌திலே.

அப்பா பேரு கார்திகேய‌னுங்க‌ ஆனா ம‌த்த‌து எதுவுமே ச‌ரியாவ‌ல்லையே என்று க‌ஸ்ட‌ம‌ர் சொல்லும் போது, அப்பன்னா இது உங்க ஏடு இல்ல ப‌ர‌வாயில்ல‌ விடுங்க‌ அடுத்த‌தைப் பார்ப்போம் என்று அடுத்த‌ ஏடுக்குப் போய்விடுவார்க‌ள்.

ஆனால் அப்பா பெய‌ர் கார்த்திகேய‌ன் என்பதை அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌திய‌ வைத்திருப்பார்க‌ள்.

அடுத்த‌ ஏடில் க‌வ‌ன‌மாக‌ அப்பா பெய‌ர் வ‌ராம‌ல் ம‌ற்ற‌ விப‌ர‌ங்க‌ள‌ச் சேக‌ரிப்ப‌தில் க‌வ‌ன‌ம் செலுத்துவார்க‌ள்.

அவ‌ர்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே உங்க‌ளுக்கு இரும்புத் தொழில் இல்ல‌, உட‌ன் பிற‌ந்த‌வ‌ர் க‌ண்டிப்பாக‌ இருவ‌ர் இல்லை. காவிரி மாவட்டம் ஊர் அல்ல போன்ற‌ விப‌ரங்க‌ள் தெரியுமாத‌லால் அடுத்த‌டுத்த‌ கேள்விக‌ள் அத‌ற்க்குத் த‌குந்தார் போல் வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்டிருக்கும்.

கஸ்ட‌ம‌ர் த‌ன் கூட‌ வ‌ந்திருப்ப‌வ‌ரிட‌ம் பேசுவ‌தையும் அவ‌ரின் ரியாக்ச‌னையும் கூட‌ குறிப்பாக‌க் க‌வ‌னித்துத் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டி விடுவார்க‌ள்.

க‌ஸ்ட‌ம‌ர் ரொம்ப‌ அப்பாவியாய் இருந்தால் ஒரிரு ஏடு ப‌டித்த‌ நிலையிலேயே ச‌ரியான‌ ஏடு கிடைத்து விடும்.

அடுத்த ஏடுகளில் வ‌ரும் பாட‌ல்க‌ளில்

க‌ஸ்ட‌ம‌ரின் பெய‌ர் ம‌ற்றும் த‌ந்தைக்கு இருக்கும் நோய் அம்மாவின் பெய‌ர் ‍‍‍ம‌ற்றும் க‌ஸ்ட‌ம‌ரின் ப‌டிப்பு க‌ல்யாண‌மான‌வ‌ரா என்ப‌து ப‌ற்றி ம‌ற்றும் குடும்ப‌/தொழில் பிர‌ச்ச‌னைக‌ள்
என்று ப‌ல‌ வேறுப‌ட்ட‌ காம்பினேஷ‌னில் கேள்விக‌ள் வ‌ரும்.

அவ‌ர்க‌ளுக்குத் தேவை ஒரு ஏட்டுக்கு ஏதேனும் ஒரு த‌க‌வ‌ல் தான். ஓவ்வொரு ஏட்டையும் அவ‌ர்க‌ள் இது உங்க‌ளுடைய‌த‌ல்ல‌ என்று வைக்கும் போது அட்லீஸ்ட் ஒரு ச‌ரியென்ற‌ த‌வ‌லும் மூன்று த‌வ‌று என்ற‌ ப‌தில்க‌ளும் கிடைக்கும்.

அப்ப‌டித் த‌வ‌றுக‌ளை அறிந்து ஒதுக்கி ஒதுக்கி கடஸ்டமரைப் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ த‌க‌வ‌ல்க‌ளை (அவரிட‌மிருந்தே) பெற்றிருப்பார்க‌ள்.

க‌டைசி ஏட்டில் இந்த‌க் த‌க‌வ‌ல்க‌ளை ப‌ழ‌ம்த‌மிழ் பாட்டுப் போல‌ த‌ரும் போது, க‌ஸ்ட‌ம‌ர் இது எல்லாமே ச‌ரியா வ‌ருதே என்று அக‌ ம‌கிழ்ந்து போவார்.
தன்னுடைய அடிப்படைத் தகவல்கள் சரியென்றதும், இனி படிப்பவை அனைத்தையும் அப்படியே நம்பலாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பார் கஸ்டமர்.
ஏடுபடிப்பவர்கள் இதில் தொழில் காண்டம், திருமண காண்டம் என்ற பல நிலைகளை வைத்திருப்பார்கள். கஸ்டமர் எந்த காண்டம் பார்க்க வேண்டும் என்று முன்பே சொல்ல வேண்டும். அப்ப தான் அந்த ஏடுகளாக பார்த்துத் தேட முடியும் என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அதிலிருந்தே அவர் என்ன பிரச்சனைக்காக ஏடு பார்கிறார் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த "பிட்"‍ஐ போடுவார்கள். கல்யாணம் காண்டம் என்றதுமே அவருக்கு கல்யாணத்தில் சிக்கல் என்பதால்

அதற்குத் தகுந்த மாதிரி படிப்பதற்கே இந்த டெக்னிக்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எழுதுகிறேன்

Sunday, 18 January 2009

நம்பலாமா நாடி ஜோதிடத்தை - பகுதி 1


முதலில் நாடி ஜோதிடத்தில் படிக்கப் படும் ஏடுகளை யார் எழுதியது ?

ரிஷிகள் முனிவர்கள் எழுதியது என்பார்கள்.


நான் புரிந்து கொண்டுள்ள வகையில் ரிஷிகள் முனிவர்களை எல்லாம் தற்போதைய ஸ்டான்டர்டுடன் பொருத்திப் பார்த்தால் ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் தான் கருத முடியும். கல்வி கற்பித்தவர்களாகவும் ஒரு பல்கழைக் கழகம் போல குருகுலம் நடத்தியவர்களாகவும் தான் அறிகிறேன்.


அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாதிரி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கப் போகிறவர்களைப்பற்றி அவர்கள் வரலாற்றை வாழ்க்கையை எழுத வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.


இப்போதைய மென்பொருள் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இப்போது பயன் படக்கூடிய எதாவது ஒரு செயலுக்கு சாப்ட்வேர் எழுதுவார்களே தவிர, இன்னும் ஐம்பது வருடம் கழித்துத் தான் பயன் தரும் என்கிற வேலைக்கு கண்டிப்பாக எழுதமாட்டார்கள். அதுவும் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து பயன் தரும் என்றால் அதைப் பற்றி சிந்திக்கக் கூட மாட்டார்கள்.


எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுளின் பெயரால் ரிஷிகளின் பெயரால் சொல்லப்படுகிற ஏமாற்று வேலைகளை நான் நம்புவதில்லை.

அவர்கள் வாழ்ந்த காலத்திலுள்ள சொசைட்டிக்கு உபயோகப்படக்கூடிய வகையில் ஏதாவது செய்திருப்பார்களே தவிர இது மாதிரி வேலையற்ற வேலையை செய்திருக்க வாய்பில்லை.


என்னைக் கேட்டால் ஜோதிடத்தை ஆத்திகர் நாத்திகர் என இரு சாரரும் எதிர்க்க வேன்டியது அவசியம்.


நம் நாட்டில் நல்ல ஆத்திகர்கள் ரொம்பக் கம்மி.

ஆனால் அதை விட நாத்திகர்கள் நம்மிடம் இல்லவே இல்லை என்றே நான் சொல்வேன். நம்மிடம் இருப்பவர்கள் போலி நாத்திகர்களே.

கடவுளை இழிவு படுத்திப் பேசுபவர்கள் எல்லாம் நாத்திகர்கள் அல்ல. இந்தப் பதிவில் அவர்களைப் பற்றி அதிகமாக பேச வேண்டியதில்லை. நாத்திகத்தை பற்றி தனிப் பதிவு எழுத உத்தேசம்.

நாடி ஜோதிடத்தைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Saturday, 17 January 2009

என் முதல் பதிவு

தமிழ் வலைப் பதிவுகளை நான் அவ்வப்போது படித்து வந்தாலும் ,வலைப் பதிவர்களின் சிறு பிள்ளைத்தனமான‌ போக்கு எனக்குப் பிடிப்பதில்லை. அதனாலேயே எனக்குப் பதிவுகள் இட வேண்டும் என்ற உந்துதல் இல்லாமலேயே இருந்தது.

வெகு ஜன ஊடகங்களில் நமது எழுத்து பல வேறு தரப் பரிசோதனைகளையும் அந்த பத்திரிக்கைகளின் விருப்பு வெறுப்பகளையும் கடந்து வரவேண்டும்.ஆனால் இங்கே ஒரே க்ளிக்‍-ல் நமது எழுத்தைக் கடைத் தெருவிற்கு கொண்டு வர முடியும். யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்தைப் பற்றி வேன்டுமானாலும் எழுதிவிட முடிகிறது. பெரும்பாலான பதிவர்கள் தங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்ற ரீதியில் திரிவதாகவே நான் உணர்கிறேன்.

டோன்டு சாரின் பதிவில் நாடி ஜோதிடத்தைப் பற்றி விவாதம் வந்த போது,இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதினால் என்ன என்று நினைத்ததின் விளைவு இன்று என்னையும் பதிவுகலகில் கால் பதிக்க வைத்திருகிறது.

விரைவில் நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவுடன் வருவேன்.

பரிசோதனைப் பதிவு

பரிசோதனைப் பதிவு
பரிசோதனைப் பதிவு.
பரிசோதனைப் பதிவு