Thursday 24 December 2009

தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் -பகுதி 2

மறு நாள் கில்லி மாதிரி வண்டி ஏழு மணிக்கு வந்தது. போகிற வழியில் ஒரு வெள்ளைக்கார தம்பதிகளை ஏற்றிக் கொண்டு வழியில் floating market மற்றும் Snake Farmபார்த்து விட்டு (இவற்றைப் பற்றி தனி பதிவு எழுத உத்தேசம்) நேரே நம்ம புலிக் கோவிலுக்கு வந்தடைந்தோம்.

From Rishaban tour

அதன் பெயர் Wat Pa Luangata Bua Yannasampanno என்கிற டைகர் டெம்பிள். வாட் என்றால் கோவில் என்று அர்த்தமாம். டைகர் டெம்பிள் போரப்ப கண்ணைப் பறிக்கிற கலர் உடை அணிந்தால் உள்ளே போக முடியாது என்று அந்தப் பெண் எச்சரித்திருந்ததால், வெளிர் நிறத்தில் வந்திருந்தோம்.உள்ளே செல்ல டிக்கட் வாங்கிய பிறகு வாசலில் உள்ள போர்டைப் பார்த்து அதிர்ந்தோம். கோவிலுக்குள்ளே பலவகையான காட்டு மிருகங்கள் திரியுமென்றும் அவை உங்களுக்கு ஊறு செய்தால் அதற்கு கோவில் பொறுப்பல்ல ,மேலும் இது தொடர்பான படிவத்தில் கையெழுத்து செய்தால் மட்டுமே அனுமதி என்றும் இருந்தது.




நீங்க தானே ஆசைப்பட்டீங்க வாங்க போலாம் என்று என் மனைவி உற்சாகமாகக் கூவ எனக்கோ வயிற்றில் புலியை சாரி புளியைக் கரைத்தது.எங்கள்டிரைவர், புலி இது வரைக்கும் யாரையும் ஒன்னும் பன்னுனதில்ல சும்மா உள்ளே போங்க tiger canyon க்கு வேற ஒரு கிலோமீட்டர் நடக்கனும் என்றார்.குழந்தை இருக்கதால நீயும் கூட வாவேன் என்று அழைத்தற்கு, நோ நோ தினம் இதைதானே பார்கிறேன் என்று வர மறுத்து விட்டார். எஙகளுடன் வந்த ஜோடி எப்போதோ போய்விட்டிருந்தது.நம்ம ஊர் கரு வேலங்காடு மாதிரி 80ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. நிறைய டூரிஸ்ட்டுகளுக்கு இந்த இடத்தைப் பற்றித் தெரியாததால் கூட்டம் அதிகமில்லை. இங்குமங்குமாக ஓரிருவர் நடமாடிக் கொண்டிருக்க, வழியில் அவிழ்த்து விட்ட காளைகளாக குதிரை, நம்ம ஊர் சாதி பன்றி , நரி மாதிரி ஏதோ ஒன்றும் தென்பட்டது.இதுக்கு தான் அப்படி கிளப்பினாங்களா பீதிய என்று நினைத்துக் கொண்டு நடந்தோம்.

எங்க எப்படிப் போகனும்னு ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தது. நடந்த வழியெங்கும் நார்த்தை மரங்கள் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.அந்தப் பாதை திரும்புகிற இடத்தில் உட்கார்ந்திருந்த புத்த பிட்சுவிடம் கேட்க அவர் எங்களை இட்டுக் கொண்டு போனார். அவர் துணைக்கு வந்ததற்கு அப்புறம் வழி நெடுக கைகாட்டி மரமாக வந்தது.கூன்டில் புலிகள் இருக்கும் டூரிஸ்ட்கள் வரும் போது வெளியில் கொண்டு வந்து போட்டோ எடுக்க விடுவார்கள் போல என்றே நான் நினைத்திருந்தேன். மெக்கனா’ஸ் கோல்டு படத்தில் தங்க மலையைத் தேடி உமர்ஷெரீப் குதிரையில் நீண்ட தூரம் பயணம் செய்து வருவார்.அவர் முதன் முதலாக மலையைப் பார்க்கும் போது அதீத சத்தத்தமான பின்னனி இசையுடன் தங்கமலையைக் காட்டி பார்பவர்களைப் பிரம்மிக்க வைப்பார்கள்.

அதுபோலவே சுண்ணாம்பு பாறைகளாகஇருந்த அந்த பகுதியை கடந்தபோது விரிந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 17 புலிகள் வெட்ட வெளியில் படுத்திருந்தது. இத்தனை கூட்டமாக புலிகளை அதுவும் திறந்த வெளியில் பார்த்த போது கிலியுடன் கூடிய பிரம்மிப்பு வந்தது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புத்தத் துறவிகளுடன் சில வெள்ளைக்கார வாலன்டியர்களும் இருந்தார்கள்


தங்கமணி முதலில் போய் போட்டோ எடுத்து வர அடுத்து நான் போனேன், அதுவரை உறக்கத்தில் இருந்த புலி நான் உட்காரும் போது  வாலை மெல்ல அசைக்க, எனக்கு திகிலாக இருந்தாலும் பயம் வரவில்லை. கூடவே வாலன்டியர்ஸ் இருக்கிற தைரியம் தான். போட்டோ க்ளிக் ஆன‌ நிமிசத்தில் கைதியப் பிடிப்பது போல நம்மை கபக் என்று பிடித்து கொள்வார்கள். பெரும் பாலும் புலிக்கு பின் புற‌மாக‌வே ந‌ம்மை அழைத்துச் செல்கிறார்க‌ள். சத்தம் எதுவும் போடக்கூடாது என்று எச்சரித்த பின் தான் அழைத்தெ செல்கிறார்கள்.


நாங்களும் தொடுவோம்ல
உண்மையில் அது ஒரு பெளத்த மடாலாயம் ப்ளஸ் கோவில். தாய்லாந்து பர்மா எல்லையில் உள்ள காடுகளில் (பெங்கால் டைகர்ஸ்) புலிகளும் அதை வேட்டையாடுபவர்களும் அதிகமாம். ஆனால் உலகெங்கிலும் மொழி,இன,மத வேறுபாடின்றி சாதாரண மக்கள் பெரும்பாலோனோர் அப்பாவிகள் மற்றும் நல்லவர்கள். தாயலாந்து கிராமத்தினரும் புலிகள் வேட்டையாடப் படுவதைக் காணச்சகிக்காமல், தங்களால் இயன்ற அளவுக்கு கிரிமினல்களை தடுத்துவந்திருக்கிறார்கள். அப்படி அவர்களால் மீட்கப்பட்ட சின்னஞ்சிறு புலிக் குட்டியை இந்த புத்த கோவிலில் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார்கள். அதை தன் கூடவே வைத்து வளர்த்திருக்கிறார் புத்த பிட்சு. அன்பே உருவான துறவி வளர்த்த புலி எப்படி இருக்கும் அது மிக சாந்தமாக அவருடனுயே உல்லாத்த ஆரம்பித்ததும், அப்பகுதி மக்கள் சமூகவிரோதிகளின் துப்பாக்கிக்கு பலியான புலிகளின் குட்டிகளை மீட்டு அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இப்போது சிறிதும் பெரிதுமாக சுமார் 17 புலிகள் இருக்கின்றன.






அங்கிருந்தவர்கள் புலி தலைய மடியில் வச்சு படமெடுக்கிறதுன்னா எடுத்துக்கலாம் என்றார்கள். இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு என்று எனக்கு உள்ளுர உதறினாலும். குழந்தைய வச்சுக்கிட்டு இருக்கிறதால இப்ப வேண்டாம் என்று நான் நகர, இது சாது பிரானி சும்மா உட்காருங்க என்றார். என் மனைவி இவ்வளவு தூரம் வந்துட்டம் இதப் பண்ண மாட்டமா வாங்க என்று போய் உட்கார இந்த நேரத்தில் கொட்டாவி ஏதும் விட்டால் என்னாவது, அதுக்கு திடீரென கோபம் வந்த என்னாவது, போன்ற ஆதார சந்தேகங்கள் மனதில் ஒட நானும் உட்கார்ந்தேன். புலியின் தலையை அலாக்கா தூக்கி மடியில் வைத்தார்கள். அதுவரை சும்மா இருந்த பாப்பா, புலியைப் பார்த்து பெள பெள என்று கூப்பிட, வாலன்டியர் சத்தம் கூடாது என்று சைகை செய்ய, பாப்பாவுக்கு அது புரியுமா கத்திக் கொண்டே இருந்தாள். ஆனால் பாப்பா தானே கத்தட்டும் என்று புலி கண்டு கொள்ளவே இல்லை. பாதி பயமும் மீதி த்ரில்லுமாக படமெடுத்துக் கொண்டு வந்தோம்.


ஏழெட்டு வயது வெள்ளைக்காரக் குழந்தைகள் மல்லாக்க படுத்திருக்கும்புலியின் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தன. என்னா தைரியம் என்று நினைத்துக் கொண்டேன். வெள்ளைக்கார‌ர்கள் சொறிந்து கொடுத்தால் அழகாக் கழுத்தை நீட்டிக் கொண்டிருந்தன‌. நாங்கள் அதெற்கெல்லாம் போக‌வில்லை அது ந‌ன்றியுட‌ன் ந‌ம‌க்குத் திருப்பி சொறிந்து விட்டால்என்ன ஆவது என்ற பயம் தான் காரணம்.


இவை ஏன் இப்ப‌டி சாதுவாக‌ இருக்கிற‌து எதாவ‌து மருந்து மாய‌மா என்ப‌து ப‌ற்றியும் floating raft house,river kawi, white water rafting, சையோக் ஃபால்ஸ், டெத் ர‌யில்வே, ரத்னகோஸின் ஐலன்ட் ம‌ற்றும் பாங்காக்புத்த கோவில்கள், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ப‌ற்றி அடுத்த‌ பதிவில்.

9 comments:

அ. நம்பி said...

எப்போது மலேசியாவுக்கு வந்தீர்கள் ஐயா?

உங்கள் மலேசியப் பயணம் குறித்துப் படிக்கக் காத்திருக்கிறேன்.

Anonymous said...

Nalla uoor suththiriukeenga

Nachchu.

Thenammai Lakshmanan said...

superb RISHABAN
ungka wife and daughter m azagu

ரிஷபன் said...

நான் ‘ரிஷபன்’ என்கிற பெயரில் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.. பிரபல வார, மாத இதழ்களில் (கல்கி,விகடன், குமுதம், கலைமகள், அமுதசுரபி, தேவி, மங்கையர் மலர் உள்பட) என் படைப்புகள் பல பரிசுகளும், பிரசுரங்களும் (1000 க்கு மேல்)வந்து விட்டன. 16 சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி விட்டன. என்னுடைய வலைத்தளமும் 100 பதிவுகளைத் தாண்டி விட்டது.. நீங்களும் அதே பெயரை பயன்படுத்துவது குழப்பம் வராதா.. தயவு செய்து யோசிக்கவும். நன்றி.

ரிஷபன்Meena said...

இந்தப் பெயரில் ஒருவர் எழுதுவது எனக்கு இப்ப தான் தெரியும்.

ரிஷபன் என்ற பெயரில் என்னுடைய வலைப்பூ இருக்கும் போது, உங்களுக்கு கிடைத்திருக்க வாய்பில்லையே !

நீங்கள் எப்போது வலைப்பூ தொடங்கினீர்கள் ? ரிஷபன் என்ற பெயர் கிடைக்காத போது நீங்கள் சிந்திக்கவில்லையா ?

ரிஷபன் said...

அட என் பெயரில் நீங்க ரெண்டு பேருங்க ஏற்கெனவே இருக்குறீங்களா? அட ஆண்டவா இது என்ன சோதனை !!

ரிஷபன்Meena said...

//அட என் பெயரில் நீங்க ரெண்டு பேருங்க ஏற்கெனவே இருக்குறீங்களா? அட ஆண்டவா இது என்ன சோதனை !!//

நல்ல டைமிங்... ரசித்தேன்.

Victor Suresh said...

பயண எழுத்து உங்களுக்கு நன்றாகவே கைகூடி வந்திருக்கிறது. பல இடங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன் (பாப்பா "பௌ பௌ", நன்றியுணர்வுடன் சொரிவது போன்ற இடங்களில்). தொடர்ந்து எழுதாமல் ஏன் விட்டு விட்டீர்கள்? தாய்லாந்துக்கு அடிக்கடி போய் வந்தும் இந்த புலி சமாசாரத்தைப் போய் பார்க்க வேண்டுமென தோன்றவில்லை. அடுத்த முறை முயற்சிக்கிறேன். ஆனால் எங்க வீட்டில் உங்க வீட்டிற்கு எதிர்மறை. என் மனைவிக்குத்தான் இந்த மாதிரி புலியைப் பார்க்க வேண்டும், யானை மேல் சவாரி செய்ய வேண்டுமென்று ஆசை. எனக்கு சென்ட்ரல் ஒன்னில் ஷாப்பிங்தான் பிடிக்கும். நேற்றைய தேதியில் சிவப்பு சட்டைக்காரர்கள் அதைக் கொளுத்தி விட்டார்கள். எனவே, இனிமேல் தாய்லாந்து போனால் இயற்கைக் காட்சிகளைத்தான் ரசித்துத் தொலைக்க வேண்டியிருக்குமென்று நினைக்கிறேன்.

ரிஷபன்Meena said...

வருகைக்கு நன்றி திரு. ஏவிஎஸ்,

எந்த ஊரா இருந்தாலும் சிவப்பு சட்டை என்றால் போராட்டம் தான் போலருக்கு.