Tuesday, 14 December 2010

”வாடி உராயா” நீர்வீழ்ச்சி (Wadi Wurayah Waterfalls)


எனக்கு டைரி எழுதும் வழக்கம் கிடையாது.  ஆனால் நல்ல மறக்க முடியாத பயணங்களைப் இப்படி பயணக் கட்டுரை போன்று எழுதிவிடுவது  தற்போது வழக்கமாகி விட்டது. வெட்டியாய் நேரத்தைக் கழிக்க விரும்பதவர்களுக்கு இதற்கு மேலே படிப்பதற்கு ஒன்றும் இல்லை. யூஏஇ -ல் வசிப்பவர்களுக்கு இதை வாசிக்கப்  பிடிக்கலாம்.
சேர்ந்தார் போல் ஐந்து நாட்கள் லீவு வந்த போது எங்கேயாவது வெளியில் போகாது வீட்டில் இருக்க மனம் இல்லை. யூஏஇ-ல் Kalba, Khorfakkan, Fujairah, (தமிழில் எழுதினால் ஒரு மார்க்கமா இருக்கும்)  போன்ற இடங்களை விட்டா பிக்னிக் என்று எங்கே போக இடமிருக்கு என்று நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,  Dibba பக்கத்தில் ஒரு அருவிக்கு நண்பர்கள்சேகர்,முருகப்பன்,கண்ணன்,  என  பலர் இனந்து பெரிய குரூப்பாக போவதாகத்  தெரியவர அவர்களுடன் இனைந்து கொண்டேன். 

அந்த இடத்துக்கு பேர் ”வாடி உராயா அருவி”, பாத்தீங்களா சொன்னேன் இல்ல தமிழ்ல வேனாம்னு,  ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் Wadi Wurayah Waterfalls இனி அதை WWW என்றே குறிப்பிடலாம்.

தனியே தன்னந்தனியே என்று இருக்க வேணாம் என்று தான் எல்லோரும் சேர்ந்து செல்வதே என்பதால், லூலூ செண்டர் எதிரே அவரவர் கார்களைப் பார்க் செய்து விட்டுக்  கிளம்பினோம். குரூப்பாக சேரும் போது பலதரப்பட்ட ரசனைகள் ஒன்று சேர்வதால் வருகிற கலகலப்பு ஒரிரு குடும்பங்களாக சேர்ந்து போகும் போது வரவே வராது அல்லவா. புறப்படுவதற்கு முன்னரே, அருவியில் தண்ணியெல்லாம் இருக்கான்னு தெரியாது. நம்ம பஸ்லேயே போக முடியாமான்னும் தெரியாது போவோம் அப்படி அது சரி வராட்டி ”பீச்” எதிலாவது செட்டிலாகிடுவோம் என்றே புறப்பட்டோம். ஒன்று கூடி பயணிப்பதே குறிக்கோள் "அருவி"யோ "பீச்"சோ அதெல்லாம் பை புராடெக்ட் மாதிரித் தான்.

வண்டியில் ஏறியதும்  ராஜ்குமார்  தான் கொண்டு வந்திருந்த இளையராஜா கலெக்சனைத் தவழ விட்ட போது ,ரொம்ப நாள் கேட்காதிருந்த பல பாடல்களைக் கேட்க முடிந்தது. இளையராஜா உச்சத்தில் இருந்த போது,  அவரை இசை ஞானி என்பதும், அவர் போட்டோவை போஸ்டரில் போடுவதுமாக ஏக அமர்களப்படுமே அப்போதெல்லாம் ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியோ என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் அந்த தேனினும் இனிய  பாடல்களைக் கேட்ட போது அடடா இந்த இளையராஜாவை எத்தனை புகழ்ந்தாலும் அது தகும் என்றிருந்தது.

நம்ம டிரைவர் தான்
எங்களுக்கு கிடைத்த டிரைவர் தெய்வமா பார்த்து கொடுத்த கொடை. ஆடியோ வால்யூம் பட்டனை என்ன பச்சடி வைத்தாலும் அது உங்க ஏரியா என எதையும் கண்டு கொள்ளாது,தன் கடமையே கண்ணாக இருந்தார். பாகிஸ்தானியரில் இப்படி ஒரு பச்சக் குழந்தைய இப்ப தான் பார்கிறேன். ஆனா எல்லா லாங்வேஜ்-லும் அவருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ’ஸ்பீடு”தான் போலருக்கு. "ஸ்பெக்ட்ரம்" அளவுக்கு பணம் கொடுத்தாக் கூட 65 கி.மீ வேகத்துக்கு மேல ஓட்டவே மாட்டேன்னுட்டார். விஜய் பாட்டு எதாவது போட்டா டிரைவர் சுறுசுறு துருதுரு ஆவாரோ என்ற என்னம் வந்ததால், யாரிடமாவது இருக்கா என்று கேட்டேன், விஜய் பாட்டெல்லாம் நாங்க கேட்கிறதில்லன்னுட்டாங்க. அவரு படம் தான் மட்டமா இருக்கும் ஆனா பாட்டெல்லாம் நல்லா இருக்குமே, சே! இந்த மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

நண்பர் முருகப்பனுக்கும்  டிரைவரு-க்கும் டெலிபதி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. காலை உணவுக்கு நல்ல நிழல் பார்த்து நிறுத்த, ரைட்லன்னு நம்மவர் நினைச்சா போதும் ரைட்டில் டமால்னு ஒரம் கட்டிடுவார். இது ஆவாது வேற எடத்துக்கு போவோமா என்று தமிழில் பேசினால் கூட புரிந்து கொண்டு வண்டியைரோட்டில் இறக்கிடுவார். இவருக்கு இவ்வளவு புரியுதே, நடுவில் எங்காவது எந்திரன் பாட்டு இருந்தா போடு மச்சின்னு தமிழில் பேசப் போறாரோ என்று பயந்து கொண்டே சென்றேன்.

வழியில் எதோ ஒரு "வாடி" ("வாடி" என்றால் நீரோடை அல்லது காட்டாறு என்று  சொல்லலாம்)  என்ற ஊரில் காலை உணவுக்கு கடை விரித்தோம். அதிகாலையில் எழுந்து நானாவித ஐட்டங்கள் செய்து எடுத்து வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

மறுபடியும் WWW நோக்கி புறப்-பட்டோம். பாட்டுக்களை  நிறுத்தி விட்டு பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தார்கள். வண்டிக்கு பிற்பகுதி ஒரு அணியாவும் முன் பக்கம் இருந்தவர்கள் ஒரு அணியாக-வும் பட்டையக் கிளப்பினார்கள். அணி பிரிக்கும் போது ஆட்டத்துக்கு இல்லாதவர்கள் என்ற ஒரு பிரிவு இல்லாததால் நான் ஒரு டீம்-ல் எண்ணிக்கைக்காக இருந்தேன். எப்படி தான் இத்தனை பாடல்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று வியக்க வைத்தார்கள். சரி நாமளும் பாடுவோம்ல என்று ஒரு எழுத்துக்கு ("ம"தான் ) எதாவது பாடலை ஞாபகத்தில் கொண்டுவர முயற்சி செய்தேன். ம்ஹீம்.... அந்த எழுத்தில் தமிழ் பாட்டே இல்லை என்று என் மூளை எரர் மெஸேஜ் தந்துவிட்டது. சரி இது நமக்கு ஆவறதில்லை என்று அமர்ந்து கொண்டேன்.

சில சமயம் பாகப்பிரிவினைல சிவாஜி சோகமா பாடுவாரே அதென்ன பாட்டு என்று நண்பர் ராஜ்குமார் கேட்பார், சீரியஸா முகத்தை யோசிக்கிற மாதிரி வச்சுக்கிட்டு இருப்பேன் அதற்குள் அவருக்கே ஞாபகம் வந்துவிடும். எழுத்துக்கள் வைத்து பாடியது பத்தாது என்று பூ, நிறம், கல்லூரி,நடிகர்கள் நடித்த பாடல்கள் என்று நிறைய வெரைட்டிகளில் பாடினார்கள்.   (விஜய் படப் பாடல்களை சாய்ஸ்-ல் விட்டுவிட்டார்கள்-என்னா வில்லத்தனம்). நான் அவ்வளவுக்கு வொர்த் இல்லை என்று புரியாத ராஜ்குமார் , ஒரு முருகன் பாட்டு சொல்லுங்க என்றார். எவ்வளவு ஈசியா கேட்கிறார் என்ற சந்தோஷத்தில் நான் ”நிஜமான பக்திப் பாட்டை” சொல்ல வெறுத்துப் போனார்,சினிமாவில் வந்த சாமி பாட்டுங்க என்றவர் அப்புறம் என் பக்கம் திரும்பவே இல்லை. துபாய் திரும்பும் போது இதே பாட்டுக்குப் பாட்டு தொடர்ந்தது , நான் மெதுவா தூங்குவது போல் ஆக்ட் பண்ணிக் கொண்டே தூங்கிவிட்டேன்.

Kalba corniche ரொம்ப அழகான ஒன்று. இங்குள்ள பார்க் எனக்கு மிகவும் பிடித்த  இடம். 3 வருடத்துக்கு முன்பு வந்த எதோ ஒரு பெண் பெயர் கொண்ட புயல் (அதென்ன புயல்களுக்கு எப்போதும் பெண் பெயரே வைக்கிறார்கள்?) இந்தப் பார்க்கை வாரிக் கொண்டு போய்விட, கொஞ்ச நாள் பொழிவிழந்து கிடந்தது. மறுபடியும் முன்பை விட நன்றாக புதுப்பித்து விட்டார்கள். குழந்தைகள் விளையாட இது போல கூட்டம் இல்லாத, அதே சமயம் நிறைவான எக்யூப்மெண்ட்கள் உள்ள ஒரு இடம் வேறு இல்லை. சாதாரன வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் இருக்காது ஆனால் இந்த லீவு சமயத்திலும் காத்து வாங்கிக் கொண்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் குழந்தைகளை விளையாட விட்டு விட்டு காலாற நடந்தோம்.

மீன்டும் WWW நோக்கிப் பயணப்பட்டோம். Khorfakkan தாண்டியதும், எங்கப்பா இங்கிருந்த மேப் என்று கண்ணன் தேட, என்ன புரிந்ததோ எங்க டிரைவர் வண்டியை ஓரங்கட்டினார். முன்னால் காரில் வந்த நண்பர் முருகப்பன் மேப்-க்காக தான் வெயிட் பண்ணியிருக்கிறார். ஆனா கடைசி வரை அது சிக்கலை, சிட்டிசனில் கிராமத்தை தேடுகிற அஜித் குழு போல சரி நாம உத்தேசமா கிளம்புவோம் என்று புறப்பட்டோம். (அந்தப் படத்தில் மேப்லேயே கிராமம் இருக்காது பாவம்).  ஏம்பா நிஜமாவே அப்படி ஒரு அருவி இருக்கா இல்ல வடிவேலு கிணற்றை தேடற மாதிரி அத்துவான காட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்பிடப்போறீங்களா என்று கேட்க நினைத்த என் ஆர்வத்தை அடக்கிக் கொண்டேன். மலையாளி இருக்க பயம் ஏன், ஒரு மலையாளி கடையில் விசாரிக்க அழகு போல வழி சொன்னார்கள்.

அமானுஷ்ய அமைதி தவழ்ந்த  ஹஜார் மலைப்பகுதி பள்ளத்தாக்குப் பகுதியில் வண்டி பயணிக்க, திரு.சேகர் என்னப்பா இது நம்மளை எங்கயோ கடத்திட்டு போற மாதிரி இருக்கே, இந்தாங்க கன்சைன்மெண்ட் வந்தாச்சு என்று யாரிடமாவது ஒப்படைத்து விட்டு போகப் போகிறார்கள் என்றார். டிரைவர் மானஸ்தன், எதைப் பற்றியும் கவலைப் படாமல்,  எங்கே செல்லும் இந்தப் பாதை என்று ஒட்டிக் கொண்டிருந்தார், இப்போ அவரைக் கண்ணன் கஷ்டப்பட்டு இயக்கிக் கொண்டிருந்தார்.ஒரு வழியாய் www வந்தடைந்தோம்.

தாழ்வான பாலத்தின் அருகே விரல் விட்டு என்னக் கூடிய அளவுக்கு சில பஸ்களும் கார்களும் இருந்தன. தண்ணீர் அபாயம் என்ற போர்ட் அருகே வண்டியை நிறுத்தினோம். இரண்டு மலைகளுக்கு நடுவே ஒடும் நதி அல்லது நீரோடை வழியில் (மழை பெய்தால் மட்டும் நீர் வருமாம்) கிட்டத்தட்ட 4 கி.மீ சென்றால் அருவி வருமாம்.ஆற்றுப் பகுதியில் சில 4x4 க்கள் சென்றன. ஒரு பாகிஸ்தானி வாடகைக்கு டிரிப்படித்துக் கொண்டி-ருந்தார். அந்த ஆளிடம் நீயா நானா ரேஞ்சுக்கு பேசி தோதான விலைக்கு பிடித்தோம்.  எங்களில்சிலர் அதில் வர நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.  ஹஜார் மலை பரந்து விரிந்தி-ருந்தது. நம்ம ஊர் மலைகள் இந்த மலைகளை தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொள்ளுமா என்று தெரியாது.

குட்டிக் கற்களும் மன்னும் கலந்த ஒரு கலவையான மலை. சில இடங்களில் அழுக்குக் கலரிலும் சில இடங்களில் செந்நிறத்திலும் இருந்தது. ஆனாலும் அழகாகத் தான் இருந்தது, இயற்கையில் எது தான் அழகில்லை. நதியில் மணலுக்கு பதில் சிறிதும் சற்றே பெரிதுமான கூழாங்கற்கள் பரவிக் கிடந்தது. நதி நெடுகும் வழுவழு கூழாங்கற்களை யரோ பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்தது போல இருந்தது. பார்பதற்கு அழகோ அழகாக தெரிந்தது.

இரண்டு பக்கமும் நெடுதுயர்ந்திருந்த மலைகளாக இருந்ததால் நடந்து போக நல்ல நிழல் இருந்தது. வளைந்து நெளிந்து சென்ற பாதை முழுதும் அழகான காட்சிகளாக விரிந்தது ஹஜார் மலை. ஒரு சில 4x4 எங்களைக் கடந்து சென்றது. நடக்க நடக்க தூரம் நீண்டு கொண்டே இருப்பதாக தோன்றினாலும், நடப்பதற்கு அருமையாக இருந்தது. நடக்கும் வழி பூராவும் தேனீயிலும் சேர்க்க முடியாத குளவியிலும் சேர்க்கமுடியாத ஒரு பூச்சி, கன்னத்தில் வந்து அப்பிக் கொண்டு படுத்தி எடுத்தது. இது வரை  விலங்கியலார்களால் அறியப்படாத புது பூச்சி வகைகள் இந்த மலைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக  Gulf News-ல் ஒரு முறை படித்ததாக  ஞாபகம். இதே மலைப் பகுதியில் நிறைய அரிய வகை வன விலங்குகளும் இருக்கின்றனவாம்.

கடைசியாய்  WWW வந்தடைந்தோம். இத்தனை தூரம் தரைவழியாய் நடக்காமல் மலை முகடு வரை காரில் சென்று அங்கிருந்து அதிரடியாய் செங்குத்து சரிவில் இறங்கிக் கொண்டிருந்தார்கள் பாகிஸ்தானியர்கள். அருவி சோ வென்று கொட்டிக் கொண்டிருந்தது அருகில் செல்ல முடியவில்லை ரொம்ப ஆழமாம். நாங்கள் கொஞ்சம் எட்ட இருந்தே அந்த குளம் போன்ற பகுதியில் குளித்தோம். ப்ரஷ் வாட்டர் அருவி வருடம் முழுதும் அந்த இடத்தில் கொட்டுவது ஆச்சரியம் தான். தண்ணீரை வீனாக்காமல் பைப் மூலம் எங்கோ கடத்துகிறார்கள்.மேலே பார்க்கும் படத்தில் மலையுடன் மலையாய், பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானிகள், நாட்டை விட்டு வரும் போதே என்ன கஷ்டம் வந்தாலும் சரி சத்தியமா   குளிக்க மட்டும் மாட்டேன் தாயே  என்று  சத்தியம் ஏதும் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல.

அவர்கள் மலையிலிருந்து செங்குத்தாய் இறங்குவதையும்  வண்டிகளில் அவசர அவசரமா செல்வதையும் பார்த்த நான் கூட,  குளிக்கத் தான் போறாங்களோ ? இவனுகளோட போய்  எப்படிக் குளிக்கப் போறோம்னு  ஒரு விதமான தயக்கத்துடனே தான் நடந்து கொண்டிருந்தேன். ஆனா ஒரு புள்ளை கூட இறங்கவே இல்லை, ஜாதிக் கட்டுப்பாடோ என்னவோ ?


ரூட்: Kalba  - Fujairah - Khofakkan-லிருந்து Dibba செல்லும் வழியில் இரண்டாவது round about -க்கு அடுத்து வரும் யூ டெர்னில் திரும்பி, அடுத்த  வலது கட்-ல் நேரா செல்லவேண்டும். ஆளரவமற்ற பகுதி என்பதால் இந்த இடத்துக்கு ஒரிரு காரில் செல்வது அத்தனை பாதுகாப்பானது இல்லை என்று எச்சரிக்கப் படுகிறீர்கள்.
.

16 comments:

Thomas Ruban said...

படங்களும், பயணக்கட்டுரையும் மிக அருமை.

நீங்க விஜய் விசிறியா!இப்படி வாரியிருக்கிர்கள்!!(உரிமையில் தான்)

பகிர்வுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

உங்க டிரைவர் உடம்பிலாவது தண்ணிப் பட்டதா....

ரிஷபன்Meena said...

தாமஸ் ரூபன்,

தங்கள் வருகைக்கு நன்றி.

வண்டிய விட்டு இறங்கினா யாரும் குளிக்கப் போறாரோன்னு தப்பா நினைச்சிடக் கூடாதேன்னு கடைசி வரை இறங்கவேயில்லை.

விஜய் ரொம்ப நல்லவரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு.

ரிஷபன்Meena said...

தாமஸ் ரூபன்,

நான் பாகிஸ்தானியர்களை கிண்டலடித்திருந்தாலும் கூட அவர்களைப் பற்றி சிலவற்றை சொல்ல வேண்டும்.

கொஞ்சம் முரட்டு சுபாவம் இருந்தாலும் பொதுவா அப்பாவிகள்.

கடினமான வேலைகளை சாதாரனமா செய்வார்கள்.

படித்த பாகிஸ்தானியர்கள் வங்கிகளில் அதிகம். மிகுந்த நட்புடன் பழகுவார்கள்

பயணமும் எண்ணங்களும் said...

கேள்விப்படாத இடம் ..

அருவின்னதும் எங்கே எங்கே னு குற்றால அருவி மாதிரி இருக்குமோ னுதேடினேன்..

இருந்தாலும் தண்ணீர் நிறைந்த இடம் அழகுதான்...

நல்ல ஓட்டுனர்தான்..

ரிஷபன்Meena said...

உங்கள் ஊர் சுற்றுலாவுக்கேன்றே கடவுளால் படைக்கப்பட்ட ஒன்று. தாய்லாந்து தான் எத்தனை அழகு.

நாங்கள் பிக்னிக் போவதற்கோ எண்ணி ஒரிரு இடங்கள் மட்டுமே. அதிலும் இந்த அருவி பற்றி பெரும்பான்மையோருக்கு தெரியாது.

ரொம்ப சின்ன அருவின்னாலும் சர்க்கரை இல்லாத ஊரில் இருக்கும் இலுப்பைப் பூ போல.

பயணமும் எண்ணங்களும் said...

ரிஷபன்Meena said...

உங்கள் ஊர் சுற்றுலாவுக்கேன்றே கடவுளால் படைக்கப்பட்ட ஒன்று. தாய்லாந்து தான் எத்தனை அழகு.//

ஆமா.. வீட்டை சுற்றியும் ஆறுதான்.. காலை சூரியன் உதிக்கும்போதே ஆற்று நீரில் பட்டு தெரிக்கும்..

( சரி சும்மா உசுப்பேத்தறத நிப்பாட்டுறேன்.:) )


ரொம்ப சின்ன அருவின்னாலும் சர்க்கரை இல்லாத ஊரில் இருக்கும் இலுப்பைப் பூ போல.//

நிச்சயமா..

டெசர்ட் சஃபாரி ஓட்டணும் என்பது என் கனவு..

ரிஷபன்Meena said...

குவாய் ஆற்றில் மிதக்கும் இல்லத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தேன். கரை புரண்டு ஓடும் நதியை தமிழர்கள் தமிழ் நாட்டில் பார்க்கவே முடியாது.

”டெசர்ட் சஃபாரி” அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லாரும் கொண்டாடும் வகையில் இருக்கும்.

பயணமும் எண்ணங்களும் said...

குவாய் ஆற்றில் மிதக்கும் இல்லத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தேன். கரை புரண்டு ஓடும் நதியை தமிழர்கள் தமிழ் நாட்டில் பார்க்கவே முடியாது.
//

மிக அருமையான இடமும் கவனிப்பும்..அதே ஆறுதான் எங்கள் வீட்டை ஒட்டியும்.. வீட்டிலிருந்தே மீன் பிடிக்கலாம்.. வீட்டின் முன் பெரிய பெரிய கப்பல்கள் நிற்கும்..

//”டெசர்ட் சஃபாரி” அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லாரும் கொண்டாடும் வகையில் இருக்கும்.//

வாழ்நாள் கனவில் ஒன்று..

ரிஷபன்Meena said...

கனவு நிறைவேற வாழ்த்துக்கள். ஷாப்பிங் பெஸ்டிவல் சமயத்தில் விசா கட்டணம் குறைவு.

THOPPITHOPPI said...

புகைப்படம் அருமையா இருக்கு. நல்லா எடுத்து இருக்கீங்க

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

ரிஷபன்Meena said...

@தொப்பி தொப்பி -உங்கள்
வருகைக்கு நன்றி!!

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

சிவகுமாரன் said...

பயணக் கட்டுரை அருமை. UAEஇல் அருவி ஆச்சர்யம் தான்

ரிஷபன்Meena said...

சிவகுமாரன்,

தங்கள் வருகைக்கு நன்றி!!