Thursday 24 December 2009

தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் -பகுதி 2

மறு நாள் கில்லி மாதிரி வண்டி ஏழு மணிக்கு வந்தது. போகிற வழியில் ஒரு வெள்ளைக்கார தம்பதிகளை ஏற்றிக் கொண்டு வழியில் floating market மற்றும் Snake Farmபார்த்து விட்டு (இவற்றைப் பற்றி தனி பதிவு எழுத உத்தேசம்) நேரே நம்ம புலிக் கோவிலுக்கு வந்தடைந்தோம்.

From Rishaban tour

அதன் பெயர் Wat Pa Luangata Bua Yannasampanno என்கிற டைகர் டெம்பிள். வாட் என்றால் கோவில் என்று அர்த்தமாம். டைகர் டெம்பிள் போரப்ப கண்ணைப் பறிக்கிற கலர் உடை அணிந்தால் உள்ளே போக முடியாது என்று அந்தப் பெண் எச்சரித்திருந்ததால், வெளிர் நிறத்தில் வந்திருந்தோம்.உள்ளே செல்ல டிக்கட் வாங்கிய பிறகு வாசலில் உள்ள போர்டைப் பார்த்து அதிர்ந்தோம். கோவிலுக்குள்ளே பலவகையான காட்டு மிருகங்கள் திரியுமென்றும் அவை உங்களுக்கு ஊறு செய்தால் அதற்கு கோவில் பொறுப்பல்ல ,மேலும் இது தொடர்பான படிவத்தில் கையெழுத்து செய்தால் மட்டுமே அனுமதி என்றும் இருந்தது.




நீங்க தானே ஆசைப்பட்டீங்க வாங்க போலாம் என்று என் மனைவி உற்சாகமாகக் கூவ எனக்கோ வயிற்றில் புலியை சாரி புளியைக் கரைத்தது.எங்கள்டிரைவர், புலி இது வரைக்கும் யாரையும் ஒன்னும் பன்னுனதில்ல சும்மா உள்ளே போங்க tiger canyon க்கு வேற ஒரு கிலோமீட்டர் நடக்கனும் என்றார்.குழந்தை இருக்கதால நீயும் கூட வாவேன் என்று அழைத்தற்கு, நோ நோ தினம் இதைதானே பார்கிறேன் என்று வர மறுத்து விட்டார். எஙகளுடன் வந்த ஜோடி எப்போதோ போய்விட்டிருந்தது.நம்ம ஊர் கரு வேலங்காடு மாதிரி 80ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. நிறைய டூரிஸ்ட்டுகளுக்கு இந்த இடத்தைப் பற்றித் தெரியாததால் கூட்டம் அதிகமில்லை. இங்குமங்குமாக ஓரிருவர் நடமாடிக் கொண்டிருக்க, வழியில் அவிழ்த்து விட்ட காளைகளாக குதிரை, நம்ம ஊர் சாதி பன்றி , நரி மாதிரி ஏதோ ஒன்றும் தென்பட்டது.இதுக்கு தான் அப்படி கிளப்பினாங்களா பீதிய என்று நினைத்துக் கொண்டு நடந்தோம்.

எங்க எப்படிப் போகனும்னு ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தது. நடந்த வழியெங்கும் நார்த்தை மரங்கள் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.அந்தப் பாதை திரும்புகிற இடத்தில் உட்கார்ந்திருந்த புத்த பிட்சுவிடம் கேட்க அவர் எங்களை இட்டுக் கொண்டு போனார். அவர் துணைக்கு வந்ததற்கு அப்புறம் வழி நெடுக கைகாட்டி மரமாக வந்தது.கூன்டில் புலிகள் இருக்கும் டூரிஸ்ட்கள் வரும் போது வெளியில் கொண்டு வந்து போட்டோ எடுக்க விடுவார்கள் போல என்றே நான் நினைத்திருந்தேன். மெக்கனா’ஸ் கோல்டு படத்தில் தங்க மலையைத் தேடி உமர்ஷெரீப் குதிரையில் நீண்ட தூரம் பயணம் செய்து வருவார்.அவர் முதன் முதலாக மலையைப் பார்க்கும் போது அதீத சத்தத்தமான பின்னனி இசையுடன் தங்கமலையைக் காட்டி பார்பவர்களைப் பிரம்மிக்க வைப்பார்கள்.

அதுபோலவே சுண்ணாம்பு பாறைகளாகஇருந்த அந்த பகுதியை கடந்தபோது விரிந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 17 புலிகள் வெட்ட வெளியில் படுத்திருந்தது. இத்தனை கூட்டமாக புலிகளை அதுவும் திறந்த வெளியில் பார்த்த போது கிலியுடன் கூடிய பிரம்மிப்பு வந்தது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புத்தத் துறவிகளுடன் சில வெள்ளைக்கார வாலன்டியர்களும் இருந்தார்கள்


தங்கமணி முதலில் போய் போட்டோ எடுத்து வர அடுத்து நான் போனேன், அதுவரை உறக்கத்தில் இருந்த புலி நான் உட்காரும் போது  வாலை மெல்ல அசைக்க, எனக்கு திகிலாக இருந்தாலும் பயம் வரவில்லை. கூடவே வாலன்டியர்ஸ் இருக்கிற தைரியம் தான். போட்டோ க்ளிக் ஆன‌ நிமிசத்தில் கைதியப் பிடிப்பது போல நம்மை கபக் என்று பிடித்து கொள்வார்கள். பெரும் பாலும் புலிக்கு பின் புற‌மாக‌வே ந‌ம்மை அழைத்துச் செல்கிறார்க‌ள். சத்தம் எதுவும் போடக்கூடாது என்று எச்சரித்த பின் தான் அழைத்தெ செல்கிறார்கள்.


நாங்களும் தொடுவோம்ல
உண்மையில் அது ஒரு பெளத்த மடாலாயம் ப்ளஸ் கோவில். தாய்லாந்து பர்மா எல்லையில் உள்ள காடுகளில் (பெங்கால் டைகர்ஸ்) புலிகளும் அதை வேட்டையாடுபவர்களும் அதிகமாம். ஆனால் உலகெங்கிலும் மொழி,இன,மத வேறுபாடின்றி சாதாரண மக்கள் பெரும்பாலோனோர் அப்பாவிகள் மற்றும் நல்லவர்கள். தாயலாந்து கிராமத்தினரும் புலிகள் வேட்டையாடப் படுவதைக் காணச்சகிக்காமல், தங்களால் இயன்ற அளவுக்கு கிரிமினல்களை தடுத்துவந்திருக்கிறார்கள். அப்படி அவர்களால் மீட்கப்பட்ட சின்னஞ்சிறு புலிக் குட்டியை இந்த புத்த கோவிலில் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார்கள். அதை தன் கூடவே வைத்து வளர்த்திருக்கிறார் புத்த பிட்சு. அன்பே உருவான துறவி வளர்த்த புலி எப்படி இருக்கும் அது மிக சாந்தமாக அவருடனுயே உல்லாத்த ஆரம்பித்ததும், அப்பகுதி மக்கள் சமூகவிரோதிகளின் துப்பாக்கிக்கு பலியான புலிகளின் குட்டிகளை மீட்டு அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இப்போது சிறிதும் பெரிதுமாக சுமார் 17 புலிகள் இருக்கின்றன.






அங்கிருந்தவர்கள் புலி தலைய மடியில் வச்சு படமெடுக்கிறதுன்னா எடுத்துக்கலாம் என்றார்கள். இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு என்று எனக்கு உள்ளுர உதறினாலும். குழந்தைய வச்சுக்கிட்டு இருக்கிறதால இப்ப வேண்டாம் என்று நான் நகர, இது சாது பிரானி சும்மா உட்காருங்க என்றார். என் மனைவி இவ்வளவு தூரம் வந்துட்டம் இதப் பண்ண மாட்டமா வாங்க என்று போய் உட்கார இந்த நேரத்தில் கொட்டாவி ஏதும் விட்டால் என்னாவது, அதுக்கு திடீரென கோபம் வந்த என்னாவது, போன்ற ஆதார சந்தேகங்கள் மனதில் ஒட நானும் உட்கார்ந்தேன். புலியின் தலையை அலாக்கா தூக்கி மடியில் வைத்தார்கள். அதுவரை சும்மா இருந்த பாப்பா, புலியைப் பார்த்து பெள பெள என்று கூப்பிட, வாலன்டியர் சத்தம் கூடாது என்று சைகை செய்ய, பாப்பாவுக்கு அது புரியுமா கத்திக் கொண்டே இருந்தாள். ஆனால் பாப்பா தானே கத்தட்டும் என்று புலி கண்டு கொள்ளவே இல்லை. பாதி பயமும் மீதி த்ரில்லுமாக படமெடுத்துக் கொண்டு வந்தோம்.


ஏழெட்டு வயது வெள்ளைக்காரக் குழந்தைகள் மல்லாக்க படுத்திருக்கும்புலியின் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தன. என்னா தைரியம் என்று நினைத்துக் கொண்டேன். வெள்ளைக்கார‌ர்கள் சொறிந்து கொடுத்தால் அழகாக் கழுத்தை நீட்டிக் கொண்டிருந்தன‌. நாங்கள் அதெற்கெல்லாம் போக‌வில்லை அது ந‌ன்றியுட‌ன் ந‌ம‌க்குத் திருப்பி சொறிந்து விட்டால்என்ன ஆவது என்ற பயம் தான் காரணம்.


இவை ஏன் இப்ப‌டி சாதுவாக‌ இருக்கிற‌து எதாவ‌து மருந்து மாய‌மா என்ப‌து ப‌ற்றியும் floating raft house,river kawi, white water rafting, சையோக் ஃபால்ஸ், டெத் ர‌யில்வே, ரத்னகோஸின் ஐலன்ட் ம‌ற்றும் பாங்காக்புத்த கோவில்கள், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ப‌ற்றி அடுத்த‌ பதிவில்.

தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் -பகுதி 1

பயணம் போவது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒவ்வொரு பயணமும் நம்மைப் புதுப்பிப்பது என்பது உண்மை தானே. இந்த முறை ஊர் செல்லும் போது தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் வழியாக செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

டிஸ்கவரி சானலில் ஒரு புத்த பிக்க்ஷு புலியை ஏதோ நாய் குட்டி போல பிடித்துக் கொண்டு நடந்து போவதை நான் முதலில் பார்த்தபோது ஆச்சரியத்தில் இப்படி கூட முடியுமா என்று வியப்புற்றேன்.தாய்லாந்தில் ஏதோ ஒரு இடம் என்று பார்த்ததாக ஞாபகம். அங்கே போகலாம் என்று அப்போது சிந்திக்கக் கூட இல்லாதால் அது எங்கே இருக்கிறது அந்த நிறுவனத்தின் பெயர் என்ன என்பதை எல்லாம் நான் அப்போது கவனித்து வைத்திருக்கவில்லை.


From Rishaban tour

தாய்லாந்துக்கு போகலாம் என்று முடிவு செய்தவுடன் நான் பார்க்கவேண்டிய இடங்களுக்கு லிஸ்ட் தயார் செய்த போது இந்த புலிப்பேட்டை தான் முதலிடம் பிடித்து. ஆனால் அந்த ஊரின் பெயரும் தெரியாமல் அது ஏதும் சரணாலயமா அல்லது zoo-வா என்று தெரியாத நிலையில் அது பற்றிய விபரத்தை தாய்லாந்து எம்பஸிக்கு போயும் கூட என்னால் சேகரிக்க முடியவில்லை.

எனக்கு பாக்கேஜ் டூரில் செல்வது அறவே பிடிக்கவே பிடிக்காத ஒன்று. சில சமயம் அது எக்னாமிக்கலாக கூட இருக்கலாம். ஆனால் என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனார் என்கிற மாதிரி நானும் இந்த இந்த இடங்களுக்கு போயிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள உதவுமே தவிர நாம் ரசித்து பார்க்க இயலாது. அடுத்தடுத்த ஊர்களுக்கு உள்நாட்டு விமானமோ அல்லது ரயிலோ புக் செய்திருப்பார்கள் எங்கேனும் நாம் விரும்பினால் கூட அதிக நாள் தங்க இயலாது போகும்.அவர்கள் அரேஞ்செய்திருக்கும் சைட்சீயிங் டூர்கள் எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருப்பதுடன் பிடிக்கிறதோ பிடிக்கலையோ எல்லாத்திற்கும் போய் தொலைய வேண்டி இருக்கும். எனக்கு ம்யூசியம், பார்க், ஷாபிங்க் மால்கள் பார்பதில் கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது.

அதனால் தகுந்த முன் ஏற்பாடு இல்லாமல் அங்கே போய் பார்த்துக் கொள்வோம் என்று 'கோயிந்து' மாதிரி கிளம்புவது தான் எனக்குப் பிடிக்கும். அதனால் சென்று சேர்கிற முதல் நாள்மட்டும் தங்குவதற்கு Baiyoke Towers-ல் புக் செய்து கொண்டு கிளம்பினோம். ஹோட்டல்களின் வலைத்தளத்தில் இருக்கிற டாரிப் கார்டுகளைப் பார்த்தால் நெட்-புக் செய்தால் மிகக் குறைவு என்பது போலவும் வாக்-இன் –கஸ்டமர்களாக சென்றால் ரேட் அதிகம் என்பது போல கான்பித்திருப்பார்கள். ஆனால் நேரில் செல்லும் போது இந்த இரண்டுக்கும் சம்மந்தமில்லாமல் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பதே நிஜம். அதனால் சென்று சேர்கிற முதல் நாள்மட்டும் தங்குவதற்கு பாங்காக் Baiyoke Towers-ல் புக் செய்து கொண்டு கிளம்பினோம். தாய் பாட் 4500 என்று புக் செய்திருந்தோம். அதே லோகெஷனில் அதே தரத்தில் 3 ஸ்டார் ஹோட்டல்கள் 1300 க்கு வாக்-இன் – கஸ்டமராக செல்லும் போதே கிடைத்தது.

புறப்படுவதற்க்கு முன் என்ன என்ன இடத்திற்கு போகிறோம் என்று நெட்டில் தேடும் பொழுதே எனக்கு டூர் போகிற அனுபவம் கிடைக்க ஆரம்பித்துவிடும். தவறாமல் லோன்லி பிளானட் (lonely Planet) புத்தகமும் வாங்கி விடுவேன். இந்த புத்தகம் back baggers என்று அழைக்கப்படும் லோ பட்ஜெட் வெளிநாட்டு பயணிகளுக்கு வேதம். அதில் இல்லாத விபரமே இருக்காது. சாதரான லாட்ஜ் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை அதன் லொகேஷன் நீங்கள் பார்க்க இருக்கும் டூரிஸ்ட் சைட்-லிருந்து எத்தனை தூரத்தில், அதன் ரேட்,தரம் மூட்டைப்பூச்சி இருக்கா இல்லையா என்பது வரை அத்தனையும் தந்திருப்பார்கள். அது போல பப்ளிக் டிரான்ஸ்போர்ட் முதல் டாக்சி, rent a car,டுக் டுக்( நம்ம ஆட்டோதான்)எல்லாவற்றையும் தந்திருப்பார்கள். மேலும் எங்கிருந்து எதுவரை ரயிலில் செல்வது உசிதம் பின் டாக்சி அல்லது போட் எது நம் டார்கெட்டு செல்ல வசதியானது,மேலும் நடந்தே பார்க்க வேண்டிய பகுதிகள் எவை. அங்கே எந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நடக்கும்(touris traps)என்று விலாவரியாக எழுதியிருப்பார்கள்.அதைப் படிக்கும் போதே அந்தப் பகுதிகளுக்குள் நம் ஒரு வலம் வந்தது போலவே இருக்கும்.



நெட்டில் ரிச்சர்டு பாரக் என்பவர் சிங்கப்பூரில் தொடங்கி ரயிலிலேயே மலேசியா வழியாக தாய்லாந்து, லாவோஸ் வரை சென்ற அனுபவத்தைப் படித்ததும் தரைவழியில் போனால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று ஆசை வர ஆரம்பித்தது.சின்னக் குழந்தை முன் வைத்த மிட்டாய் பிளேட் மாதிரி, படிக்கிற இடத்தை எல்லாம் லிஸ்டில் சேர்க்க ஆரம்பித்தேன். நான் மேப் எல்லாம் பிரிண்ட் பண்ணி வைத்துக் கொண்டு பிளான் பண்ணுகிறேன் பேர்வழி என்று கடைசி வரை மாற்றிக் கொண்டே இருந்தேன்.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தங்கமணி (வலைப்பதிவில் மனைவியை இப்படி தான் குறிப்பிடுகிறார்கள் ஊரோடு ஒத்துப்போகிறேன்), இங்க பாருங்க அந்த நாட்டை படையெடுத்துப் பிடிக்கவா போறீங்க, நம்ம சுத்திப் பார்க்கத்தான் போறோம் -ன்னு நினைத்துக் கிட்டு சீக்கிரமா பிளானை பைனலைஸ் பன்னுங்க, கைக்குழந்தைய வச்சுகிட்டு கிளம்புறோம் அங்க வேற மழை காலம்ன்றீங்க அதுக்கு தகுந்த மாதிரி இருக்கட்டும் என்றார்.

அதானால் ரயில் செல்கிற ஆசையை முதலில் மூட்டை கட்டினேன். புக்கட், க்ராபி, கோ சுமோய் போன்ற தமிழ் பாட்டு சீன்களில் வருகிற பீச்சுகளை தவிர்த்து பாங்காக், ரத்னகோஸின் ஐலண்ட், காஞ்சினபூரி, சையோக் அங்கிருந்து வடக்கே ச்ச்யாங்மெய் வரை தாய்லாந்தில் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

பாங்காக் ஏர்போர்ட் மிகப் பெரியது. சுவர்ணபூமி என்ற சமஸ்கிருதப் பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. விசா பார்மலிட்டிகள் பத்து நிமிடத்தில் முடிய 20 நிமிடத்தில் சுவர்ண பூமி ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்தோம், நாங்கள் தங்கிய இடம் ப்ராட்நாம் (Pratunam)என்கிற லிட்டில் இந்தியா, அதனால் இந்திய உணவுக்கு பஞ்சம் இல்லை மதிய வேளையில் வந்திறங்கியதால் "புலி" பார்க்க வேண்டி டிராவல் எஜெண்ட்களைப் பார்த்து பேசினேன். அவர்கள் பாங்காக் கோவில்களிலும், ரோஸ் கார்டன் மற்றும் floating மார்கெட்டிலும் எங்களை தினிக்க முற்பட எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

From Rishaban tour
மாலை மார்கெட் ஏரியாவில் சில எஜெண்டுகளப் பார்த்தேன். அதில் ஒரு பெண் நீ சொல்கிற இடம் டைகர் டெம்பிள் அது காஞ்சினபூரியில் (kanchinaburi) இருக்கிறது என்றாள். காஞ்சினபூரி பற்றி ஏற்கனவே நெட்-ல் அலசி வைத்திருப்பதால் பாங்காக் -ஐ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அன்றிரவே அங்கே செல்ல கார் ஏற்பாடு செய்யக் கேட்டேன். கார் ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, அங்கே தங்குவதற்கு floating raft hosue -ல் நீங்கள் தங்க ஏற்பாடு செய்கிறேன் அவர்களே உங்களை கூட்டி போக கார் அனுப்பவார்கள் ஏன்றாள். அது மட்டுமல்ல அங்கு தங்கியிருக்கிறவரை நீங்கள் எங்கு போக வேண்டுமானாலும் அவர்கள் கார் அனுப்புவார்கள் அதற்கு கட்டணம் ஏதும் இல்லை, உணவும் இதில் அடக்கம் மூன்று நாட்களுக்கு 9000 தாய் பாட் என்றாள். அந்த ஹவுஸ் தரம் வசதி அதன் வாஸ்து என அனத்து விவரங்களியும் கேட்ட பின் நான் நெட்-ல் பார்த்த விலையைவிட தோதான விலையாக இருந்தாதால் புக் செய்தேன்.மறுநாள் காலை ஹோட்டலுக்கு வண்டி வரும் என்றாள்



ஹோட்டலுக்கு வந்ததும் என் காஞ்சினபூரி பற்றிய குறிப்புகளைப் படித்தேன், காஞ்சினபூரி பாங்காக்-லிருந்து 300 கீ.மீ வடக்கில் பார்மா எல்லை அருகே உள்ள சிறு நகரம். தங்கமணியிடம் நம்ப போகிற இடம் பர்மா பார்டருக்கு அருகில இருக்கு, அங்கே கொசு நிறையாவாம் என்றேன். வந்தமா சிட்டியில இருக்கிற இடங்களைப் பார்த்தோமா ஏன்று போகாம புலியப் பார்க்கிறேன் எலியப் பார்கிறேன் ஏன்று ரிமோட் வில்லேஜ்க்கு எல்லாம் எதுக்கு போவானேன்.கைப்புள்ள வேற இருக்குல்ல என்று அலுத்துக் கொன்டார்.குழந்தைக்கு ஒத்துக் கொள்ள்வில்லை என்றாள் யூ டெர்ன் எடுத்து இந்தியா செல்ல வேண்டுமே என்ற கவலை எங்களுக்கு. ஆனால் எங்க பாப்பா டூர் முழுதும் இடையூரா அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்டது இறைவன் அருளே.




Monday 19 January 2009

நம்பலாமா நாடி ஜோதிடத்தை -பகுதி 2


சின்னக் குழந்தையாய் இருந்த போது ஒரு மேஜிக் நிபுன‌ர் சீட்டுக் க‌ட்டிலிருந்து நாம் நினைத்த‌ கார்டைக் கொண்டு வ‌ந்தாலோ, தொப்பியிலிருந்து புறாவை வ‌ர‌வ‌ழைத்தாலோ அவ‌ரைக் க‌ட‌வுள் மாதிரி பார்த்திருப்போம், அவ‌ருக்கு மாயாஜால‌ ச‌க்தி இருப்ப‌தாக‌வே நம்பியிருப்போம், ந‌ம்ப‌ விரும்பியும் இருப்போம்.

வ‌ளர்ந்து ஆளாகிய‌ பிற‌கு அதைப் பார்த்து அதிச‌ய‌ப்போம் , விய‌ப்போம் ஆனால் நாம் க‌ன்டுபிடிக்க‌ முடியாத வ‌கையில் த‌ந்திர‌மாக‌ செய்கிறார்க‌ள் என்போமே த‌விர‌ அவ‌ரை மாய‌வியாக‌ப் பார்க்க‌மாட்டோம்.

நாடி ஜோதிட‌மும் இதே போன்ற‌ த‌ந்திர‌ம் தான். நான் புரிந்து கொண்டிருக்கும் வரையில் நாடி ஜோதிட‌ம் ஒரு உளவியல் விளையாட்டே !

ந‌ம‌து வ‌ச‌திக்காக‌ ஜோதிடம் பார்க்க‌ வ‌ருகிற‌வ‌ர்க‌ளை இனிமேல் க‌ஸ்ட‌ம‌ர்க‌ள் என‌ அழைக்க‌லாம்.

உங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்க வேண்டிய "விதி" இருந்தால் மட்டுமே அதை நாடி வருவீர்கள் என்றும் அப்படியே வந்தாலும் உங்களுக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே உங்கள் "ஏடு" கைக்கு வரும் என்றும் கலவரப்படுத்துவார்கள்.

இது ஒரு டெக்னிக்.

ஏடு கிடைக்காவிட்டாலே ஏதோ பெரிய கெட்டதோ என்று நினைக்கும் நிலைக்குக் கஸ்டமரைக் கொண்டு வருவதற்கே இந்தப் பீடிகை.

நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில் எதிர்காலத்திலாவது நல்லது நடக்குமா என்று தெரிந்து ஆறுதல் அடைய வேன்டியே "கஸ்டமர்கள்" ஜோதிடத்தை/"நாடி" சோதிடத்தை நாடுகிறார்கள்.

தனக்கு நல்ல நேரம் தொடங்கியாச்சு என்று அறிய விரும்பும் அவர்கள் சோதிடர்களுக்கு முழு ஒத்தழைப்புடன் நேர்மறையான பதில்களைத் தருவதற்கே விரும்புவார்கள்.

இதை நாடுபவர்கள் கேள்வி கேட்காம‌ல் ந‌ம்ப‌ விரும்புவார்க‌ள். த‌ன்னைப் ப‌ற்றி சில‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே எழுதியிருகிறார்க‌ளே என்ற‌ மலைத்துப் போய்விடுவது கூட அத‌ற்குக் கார‌ன‌மாக‌ இருக்க‌லாம்.

ப‌ழைய‌ கால‌த்து ஓலையில் அதுவும் வ‌ட்டெழுத்தில் அந்தக் காலத் தமிழ் பாடாலாக இருப்பதைப் ப‌டிப்பார்க‌ள். அதைப் பார்த்த‌துமே ,கொஞ்சம் நம்பியும் நம்பாமலும் இருப்பவர்கள் கூட சே...சே... இது க‌ண்டிப்பாக "பிராடு" ஆக‌ இருக்காது என்று நினைத்து விடுவார்க‌ள்.

நாடி ஜோதிட‌ர்க‌ள் பெரும்பாலும் உங்க‌ள் பெயர் , பெற்றோர் பெய‌ர், உங்க‌ள் தொழில் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துச் சொல்லி விடுவார்க‌ள்.

நேர‌டியாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ள் சொல்லாவிட்டாலும் இந்த‌ப் பொதுப்ப‌டை விடைக‌ளே க‌ஸ்ட‌ம‌ர்க‌ளுக்குப் போதுமான‌தாக‌ இருக்கிற‌து.

உதார‌ன‌த்துக்கு ஆனைமுக‌ன் த‌ம்பி பெய‌ருடையான் என்று சோதிட‌ர் ப‌டிக்கும் போதே ஆமா அப்பா பேரு கார்திகேய‌ன் தான் என்று வாக்குமூல‌ம் தந்து விடுவார்க‌ள்.

எது எப்படியோ அவர்கள் ஆனைமுகன் தம்பி என்று எப்படியோ கண்டு பிடித்து விடுகிறார்களே என்று நீங்கள் நினைக்கலாம்.

அங்கே தான் அவர்களின் டிரிக் அதாவது தொழில் நுட்பம் வேலை செய்கிறது.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொற்றொடர்களைப் படித்து உங்களுக்கு தெரியாமலே உங்களிடம் விடை பெறுகிறார்கள் என்பதே உண்மை.

"ஆனைமுகன் தம்பியவன் அருந்தவப் புதல்வர்
இவர் காவிரி கரையோர‌ம் தான் வ‌ள‌ர்ந்த‌ த‌வ‌ப் புத‌ல்வரிவர்
உட‌ன் பிற‌ந்தோர் இவருக்கு இருவ‌ருண்டு
இரும்புத் தொழில் த‌ன்னை இனிதாகச் செய்திடுவார்"
என்ற‌ ரீதியில் இன்னும் கூட‌ ப‌ழ‌மையான‌ பாட்டுத் தமிழில் ப‌டிப்பார்க‌ள்.

இங்கே அவ‌ர்க‌ளுக்கு வேண்டுவ‌து ஒரே வ‌ரிக்காவ‌து ச‌ரி என்ற‌ ப‌திலே.

அப்பா பேரு கார்திகேய‌னுங்க‌ ஆனா ம‌த்த‌து எதுவுமே ச‌ரியாவ‌ல்லையே என்று க‌ஸ்ட‌ம‌ர் சொல்லும் போது, அப்பன்னா இது உங்க ஏடு இல்ல ப‌ர‌வாயில்ல‌ விடுங்க‌ அடுத்த‌தைப் பார்ப்போம் என்று அடுத்த‌ ஏடுக்குப் போய்விடுவார்க‌ள்.

ஆனால் அப்பா பெய‌ர் கார்த்திகேய‌ன் என்பதை அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌திய‌ வைத்திருப்பார்க‌ள்.

அடுத்த‌ ஏடில் க‌வ‌ன‌மாக‌ அப்பா பெய‌ர் வ‌ராம‌ல் ம‌ற்ற‌ விப‌ர‌ங்க‌ள‌ச் சேக‌ரிப்ப‌தில் க‌வ‌ன‌ம் செலுத்துவார்க‌ள்.

அவ‌ர்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே உங்க‌ளுக்கு இரும்புத் தொழில் இல்ல‌, உட‌ன் பிற‌ந்த‌வ‌ர் க‌ண்டிப்பாக‌ இருவ‌ர் இல்லை. காவிரி மாவட்டம் ஊர் அல்ல போன்ற‌ விப‌ரங்க‌ள் தெரியுமாத‌லால் அடுத்த‌டுத்த‌ கேள்விக‌ள் அத‌ற்க்குத் த‌குந்தார் போல் வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்டிருக்கும்.

கஸ்ட‌ம‌ர் த‌ன் கூட‌ வ‌ந்திருப்ப‌வ‌ரிட‌ம் பேசுவ‌தையும் அவ‌ரின் ரியாக்ச‌னையும் கூட‌ குறிப்பாக‌க் க‌வ‌னித்துத் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டி விடுவார்க‌ள்.

க‌ஸ்ட‌ம‌ர் ரொம்ப‌ அப்பாவியாய் இருந்தால் ஒரிரு ஏடு ப‌டித்த‌ நிலையிலேயே ச‌ரியான‌ ஏடு கிடைத்து விடும்.

அடுத்த ஏடுகளில் வ‌ரும் பாட‌ல்க‌ளில்

க‌ஸ்ட‌ம‌ரின் பெய‌ர் ம‌ற்றும் த‌ந்தைக்கு இருக்கும் நோய் அம்மாவின் பெய‌ர் ‍‍‍ம‌ற்றும் க‌ஸ்ட‌ம‌ரின் ப‌டிப்பு க‌ல்யாண‌மான‌வ‌ரா என்ப‌து ப‌ற்றி ம‌ற்றும் குடும்ப‌/தொழில் பிர‌ச்ச‌னைக‌ள்
என்று ப‌ல‌ வேறுப‌ட்ட‌ காம்பினேஷ‌னில் கேள்விக‌ள் வ‌ரும்.

அவ‌ர்க‌ளுக்குத் தேவை ஒரு ஏட்டுக்கு ஏதேனும் ஒரு த‌க‌வ‌ல் தான். ஓவ்வொரு ஏட்டையும் அவ‌ர்க‌ள் இது உங்க‌ளுடைய‌த‌ல்ல‌ என்று வைக்கும் போது அட்லீஸ்ட் ஒரு ச‌ரியென்ற‌ த‌வ‌லும் மூன்று த‌வ‌று என்ற‌ ப‌தில்க‌ளும் கிடைக்கும்.

அப்ப‌டித் த‌வ‌றுக‌ளை அறிந்து ஒதுக்கி ஒதுக்கி கடஸ்டமரைப் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ த‌க‌வ‌ல்க‌ளை (அவரிட‌மிருந்தே) பெற்றிருப்பார்க‌ள்.

க‌டைசி ஏட்டில் இந்த‌க் த‌க‌வ‌ல்க‌ளை ப‌ழ‌ம்த‌மிழ் பாட்டுப் போல‌ த‌ரும் போது, க‌ஸ்ட‌ம‌ர் இது எல்லாமே ச‌ரியா வ‌ருதே என்று அக‌ ம‌கிழ்ந்து போவார்.
தன்னுடைய அடிப்படைத் தகவல்கள் சரியென்றதும், இனி படிப்பவை அனைத்தையும் அப்படியே நம்பலாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பார் கஸ்டமர்.
ஏடுபடிப்பவர்கள் இதில் தொழில் காண்டம், திருமண காண்டம் என்ற பல நிலைகளை வைத்திருப்பார்கள். கஸ்டமர் எந்த காண்டம் பார்க்க வேண்டும் என்று முன்பே சொல்ல வேண்டும். அப்ப தான் அந்த ஏடுகளாக பார்த்துத் தேட முடியும் என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அதிலிருந்தே அவர் என்ன பிரச்சனைக்காக ஏடு பார்கிறார் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த "பிட்"‍ஐ போடுவார்கள். கல்யாணம் காண்டம் என்றதுமே அவருக்கு கல்யாணத்தில் சிக்கல் என்பதால்

அதற்குத் தகுந்த மாதிரி படிப்பதற்கே இந்த டெக்னிக்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எழுதுகிறேன்

Sunday 18 January 2009

நம்பலாமா நாடி ஜோதிடத்தை - பகுதி 1


முதலில் நாடி ஜோதிடத்தில் படிக்கப் படும் ஏடுகளை யார் எழுதியது ?

ரிஷிகள் முனிவர்கள் எழுதியது என்பார்கள்.


நான் புரிந்து கொண்டுள்ள வகையில் ரிஷிகள் முனிவர்களை எல்லாம் தற்போதைய ஸ்டான்டர்டுடன் பொருத்திப் பார்த்தால் ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் தான் கருத முடியும். கல்வி கற்பித்தவர்களாகவும் ஒரு பல்கழைக் கழகம் போல குருகுலம் நடத்தியவர்களாகவும் தான் அறிகிறேன்.


அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாதிரி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கப் போகிறவர்களைப்பற்றி அவர்கள் வரலாற்றை வாழ்க்கையை எழுத வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.


இப்போதைய மென்பொருள் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இப்போது பயன் படக்கூடிய எதாவது ஒரு செயலுக்கு சாப்ட்வேர் எழுதுவார்களே தவிர, இன்னும் ஐம்பது வருடம் கழித்துத் தான் பயன் தரும் என்கிற வேலைக்கு கண்டிப்பாக எழுதமாட்டார்கள். அதுவும் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து பயன் தரும் என்றால் அதைப் பற்றி சிந்திக்கக் கூட மாட்டார்கள்.


எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுளின் பெயரால் ரிஷிகளின் பெயரால் சொல்லப்படுகிற ஏமாற்று வேலைகளை நான் நம்புவதில்லை.

அவர்கள் வாழ்ந்த காலத்திலுள்ள சொசைட்டிக்கு உபயோகப்படக்கூடிய வகையில் ஏதாவது செய்திருப்பார்களே தவிர இது மாதிரி வேலையற்ற வேலையை செய்திருக்க வாய்பில்லை.


என்னைக் கேட்டால் ஜோதிடத்தை ஆத்திகர் நாத்திகர் என இரு சாரரும் எதிர்க்க வேன்டியது அவசியம்.


நம் நாட்டில் நல்ல ஆத்திகர்கள் ரொம்பக் கம்மி.

ஆனால் அதை விட நாத்திகர்கள் நம்மிடம் இல்லவே இல்லை என்றே நான் சொல்வேன். நம்மிடம் இருப்பவர்கள் போலி நாத்திகர்களே.

கடவுளை இழிவு படுத்திப் பேசுபவர்கள் எல்லாம் நாத்திகர்கள் அல்ல. இந்தப் பதிவில் அவர்களைப் பற்றி அதிகமாக பேச வேண்டியதில்லை. நாத்திகத்தை பற்றி தனிப் பதிவு எழுத உத்தேசம்.

நாடி ஜோதிடத்தைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Saturday 17 January 2009

என் முதல் பதிவு

தமிழ் வலைப் பதிவுகளை நான் அவ்வப்போது படித்து வந்தாலும் ,வலைப் பதிவர்களின் சிறு பிள்ளைத்தனமான‌ போக்கு எனக்குப் பிடிப்பதில்லை. அதனாலேயே எனக்குப் பதிவுகள் இட வேண்டும் என்ற உந்துதல் இல்லாமலேயே இருந்தது.

வெகு ஜன ஊடகங்களில் நமது எழுத்து பல வேறு தரப் பரிசோதனைகளையும் அந்த பத்திரிக்கைகளின் விருப்பு வெறுப்பகளையும் கடந்து வரவேண்டும்.ஆனால் இங்கே ஒரே க்ளிக்‍-ல் நமது எழுத்தைக் கடைத் தெருவிற்கு கொண்டு வர முடியும். யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்தைப் பற்றி வேன்டுமானாலும் எழுதிவிட முடிகிறது. பெரும்பாலான பதிவர்கள் தங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்ற ரீதியில் திரிவதாகவே நான் உணர்கிறேன்.

டோன்டு சாரின் பதிவில் நாடி ஜோதிடத்தைப் பற்றி விவாதம் வந்த போது,இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதினால் என்ன என்று நினைத்ததின் விளைவு இன்று என்னையும் பதிவுகலகில் கால் பதிக்க வைத்திருகிறது.

விரைவில் நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவுடன் வருவேன்.

பரிசோதனைப் பதிவு

பரிசோதனைப் பதிவு
பரிசோதனைப் பதிவு.
பரிசோதனைப் பதிவு