Saturday 31 July 2010

குவாய் ஆறு தாய்லாந்து

தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-3

முந்திய பகுதிகளைக் கான இங்கே சொடுக்கவும்.
தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-1
தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-2

புலியை எப்படி இப்படி நாய்க் குட்டியை பழக்குவது போல் எப்படி பழக்கி வைத்திருக்கிறார்கள் எங்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. தூக்கத்துக்கு ஏதாவது மருந்து கொடுத்திருக்கலாம் என்று டூரிஸ்ட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த புத்த பிக்குவை ஒருவர் கேட்டே விட்டார்.

வைல்ட் அனிமலுக்கு drug கொடுத்தால் அது மேலும் மூர்க்கமாகத்தான் மாறும் என்றவர், புலிகள் இயல்பாகவே பகல் முழுதும் தூங்கி இரவில் வேட்டையாடும் என்றார். மேலும் சிறிய குட்டிகளாக இருக்கும் போதிருந்தே வேகவைத்த இறைச்சிதான் அவைகளுக்கு உணவாம். பொதுவாகவே அவை சோம்பேறிகள் என்றும் வயிற்றுக்கு உணவு கிடைத்துவிட்டால் போதும் பிறகு நடப்பதற்கே காசு கேட்கும் என்றார். சத்தத்தை கேட்டால் மிரளும் எனறும் அதற்காகவே சத்தம் செய்ய வேண்டாம் என்று டூரீஸ்ட்களை அறிவுறுத்துகிறோம் என்றார்.

சத்ததிற்காக ஐஸ் பெட்டியின் மூடியை பின்னால் இழுத்து
வருகிறார்கள்
மாலை நான்கு மணிக்கு டைகர் டெம்பிள் மூடும் நேரம் என்பதால் பார்வை யாளார்களை நடை பாதையிலிருந்து விலகி நிற்க சொல்லிவிட்டு ஒவ்வொரு புலியாக அதன் கொட்டடிக்கு கூட்டிக் கொண்டு சொல்கிறார்கள். அது ஒன்றும் அத்தனை சாதரானமான வேலை அல்ல, அவற்றை எழுப்பி நிற்கவைக்க தாரை தப்பட்டை முழங்குவது போல தகரங்களை வைத்து சத்தமெழுப்புகிறார்கள். அடித்துப் பிடித்து எழுந்தாலும் நடப்பேனா என்று அலும்பு செய்கின்றன. பகுதி ஒன்றில் வெளியாகியிருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டு அவற்றைக் கூட்டி செல்கிறார்கள் என்று தெரியும். வாலைப் பிடித்து திருகி , தேர் இழுப்பது போல் இழுத்து ஒரு பத்து அடி நடக்க வைத்த பின் தைரியமுள்ள(?!) டூரிஸ்ட்கள் அதன் பெல்ட்-ஐ பிடித்து கொண்டு மீதி தூரம் வரை நடக்க அனுமதிக்கிறார்கள். நான் கூட சிறிது தூரம் அவற்றுடன் நடந்தேன்.புலியை விட மிரட்டுகிற தோற்றம் எனது  என்பதால் மறுபடி மறுபடி என் படத்தை இனைப்பதை தவிர்த்திருக்கிறேன். சங்க கால தமிழ் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள் என்பார்களே அது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் ஆனால் புலிவாலைப் பிடித்த கதை என்பார்களே அதெல்லாம் சும்மா தானோ என்று தோன்றியது. அததனை நிதானமா நின்று யோசித்து யோசித்து  நடந்தன.

புலிக் கோவிலில் ஆங்காங்கே மினரல் வாட்டர்களை ஐஸ் நிறைந்த பெட்டிகளில் வைத்திருக்கிறார்கள். இலவசம் தான். சிறு குட்டிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தோம் ஆனால் மூடும் நேரம் என்பதால் எங்களை அங்கே அனுமதிக்கவில்லை.

கரை புரண்டு ஓடும் குவாய் ஆறு
நாங்கள் திரும்பி வந்த போது எங்கள் காரில் எங்களுடன் வந்த வெள்ளைக்காரர்களுடன் வேறு சிலர் உட்கார்ந்திருக்க, எங்கள் டிரைவர் தான் திரும்ப பாங்காக் செல்வதாக சொல்லி அங்கே புறப்படத்தயராக இருந்து வேறு ஒரு காரில் ஏற்றி, உங்களை சயோக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கும் ப்லோடிங் ஹவுஸ்-ல் கொண்டுவிடுவார்கள் என்றார். டூர் ஆப்ரேட்டர்கள் அங்கே குழுக்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் வண்டியில் இடமிருந்தால் மற்ற எந்தக் கம்பெனியின் பயணிகளையும் உடன் ஏற்றிக் கொள்கிறார்கள்.

தங்கமணி குழந்தைக்கு பால் வேண்டுமென்றார், டிரைவரிடம் எதோதோ சொல்லி புரியவைக்க முயன்றேன். ஹூம் … ஒன்றும் வேலைக்கு ஆவல. தாய்லாந்தில் பாங்காக் தவிர மற்ற இடங்களில் ஆங்கிலம் பேசி புரியவைக்க முடியாது என்று lonely planet புத்தகத்தில் படித்தது அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது. சாதரணமா புழங்கும் வார்த்தைகள் கூட தெரியாது “ஙே” என்று பார்த்தார்.


என்ன இது இப்படி கை மாற்றி விட்டுடானுகளே, அவர்கள் சொன்ன தரத்தில் ப்லோடிங் ஹவுஸ் இருக்குமா இருக்காதா என்ற ஆதார சந்தேகங்கள் மனதில் உறுத்த பயணித்தோம்.

இயற்கை வஞ்சனை இல்லாமல் வாரிவழங்கியிருக்கிறது. சாலையை விழுங்கிவிடட்டுமா என்று கேட்பது மாதிரி எங்கு பார்த்தாலும் ஆளுயர்ந்த மரங்கள் சாலையை கவ்விக் கொண்டு நின்றிருந்தது.

வழிநெடுக மிதக்கும் வீடுகள்
காஞ்சினபூரியிலிருந்து 20 கி.மீ. பயணித்து மலைப்பாங்கான சையோக் வாட்டர் பால்ஸ் ஏரியா வந்தடைந்தோம். சிறிய கடைவீதிப் பகுதியை கடந்து ஒரு மலை சரிவில் கார் இறங்கியது. கரைபுரண்ட வெள்ளமாய் ஒடும் குவாய் நதிக்கரை தென்பட்டது. நதிக்கரையை ஒட்டியே கார் ஓடியது. ஒரு கி.மீ-க்கு ஒன்று என ப்லோடிங் ஹவுஸ்கள் இருந்தன. தென்பட்ட படகு வீடுகள் தரமானதாகவே தோற்றமளித்ததால் நாம் தங்குமிடமும் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்தது.

Photo editor- ல் soft focus செய்தபடம்         From Online Edits


எங்கள் மிதக்கும் இல்லத்திற்கு 4.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே இருந்த மேனேஜருக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருந்தது ஆறுதலாக இருந்தது. நீங்க மட்டும் தான் வெஜிடேரியன் ஸ்பெசலா ஏற்பாடுஇ பன்ன சொல்லியிருக்கிறேன் என்றார். அந்த ஸ்பெசலுக்கு அப்போ அர்த்தம் விளங்கவில்லை. குவாய் ஆற்றில் மஞ்சளா அல்லது இளம்சிவப்பா என்று சொல்ல முடியாத நிறத்தில் தண்ணீர் ஒட்டிக் கொண்டிருந்தது. எட்டு வீடுகள் வரிசையாக மிதந்து கொண்டிருந்தன. ஒன்றுடன் ஒன்று  சிறு மரப்பாலத்தால் இனைக்கப் பட்டிருந்தது. எங்களுக்கு  எண் 6 ஒதுக்கப்படிருந்தது. மரப்பாலத்தை கடக்கும் போது தண்ணீர் செல்லும் வேகம் தெரிந்தது. அவர்கள் சொன்னபடியே 3 நட்சத்திர தரத்தில் வீடு இருந்தது. வீட்டிற்கு முன் இருக்கும் நடைபாதையில் இருந்த சேரில் வந்து அமர்ந்தோம். கரைபுரண்டு ஓடும் ஆற்றையும் மாலை நேர சூரியனை பார்த்த போதே , சே! இன்னும் ஒரிரு நாள் கூட தங்குவது போல் வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

எங்கள் அறைக்கு அடுத்த அறையில் இருந்த ஒரு வயதான அமெரிக்கக் குடும்பம் எங்களைப் போல் மூன்று நாட்கள் தங்க வந்தவர்கள் இந்தப் இடம்  பிடித்து போனதால்   20 நாட்களாக அங்கே தங்கியிருப்பதாக சொன்னார்கள். அறையும் வசதிகளும் திருப்திகரமாக இருந்தது. நாமும் இன்னமும் சில நாட்கள் தங்கினால் என்ன என்று தோன்றினாலும், எங்க பாப்பா திருப்தியாக இருந்தால் தான் உள்ள திட்டப்படியாவது ஊர் சுற்ற முடியும் என்பதால், பால் கிடைக்குமா என்று மேனேஜரிடம் கேட்க ரிஷப்ஷனுக்கு வந்தேன்.  முதல் வீடுதான் ரிஷப்ஷன், பார் டைனிங் ஹால் எல்லாம்.  பால் இல்லையென்றும் ஒரு கி.மீ தூரத்தில் ஒரு கடை இருக்கு போனா கிடைக்கும்  ”நாம்” என்று கேட்கனும் என்றார்.

ஆற்றங்கரை ஓரமாவே நடந்தேன். என்னைத் தவிர ஒரு ஈ காக்காய் கூட அந்த வழியில் தென்படவில்லை.  வழி நெடுக நார்த்தை மரங்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன. படகுத் துறையில் வாயிலில் அந்தக் கடை இருந்தது. டூரிஸ்ட்களுக்கு புத்தர் சிலையும் மற்ற கலைப் பொருள்களும் விற்கும் கடை கம் வீடு. மில்க் வேனும் என்றேன். அப்படீன்னா என்பது போல் பார்த்தார் கடைக்காரர்.  குழந்தைக்கு பால் என்று சைகையில் சொல்லிப் பார்த்தேன் வேலைக்கு ஆவல. உள்ளிருந்து அவர் மனைவி உதவிக்கு வந்தார், அவருக்கு ஒரளவு புரிய, சோயா மில்க் எடுத்து தந்தார். அதையும் நான் மறுக்க, எதோ புரிந்தவராக வீட்டிற்குல்சென்று இரு டெட்ரா பாக் மில்க எடுத்து வர, நான் துள்ளிக் குதிக்காத குறை. இதுக்கு பேரு “நாம்” என்றவர்கள் இதைக் கூட இவனுக்கு சொல்லத்ட் தெரியலையே என்பது போல் அவர்களுக்குள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

திரும்பி வரும் போது ஒரு நாயுடன் வயதான பெண் நடந்து வந்து கொண்டிருந்தார்.   நாயைப் பார்த்தால் அப்பிரானி மாதிரி தெரிந்தாலும், அது அவ்வப்போது என் அருகே வருவது என் கையில் என்ன என்பது போல் நோட்டம் இட்டதும் சற்றே பயத்தைக் கொடுத்தது. இவங்ககிட்ட ஒரு பால் வாங்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துட்டுதே , இதில நாய் கடிக்கு வைத்தியம் எல்லாம் பார்க்கனும்னா என்ன ஆகுமோ என்ற கவலை தான் காரனம்.
அந்த அம்மா சிரித்து கொண்டே என்னவோ நாயைக் கான்பித்து ”தாய்”ல் சொல்லியது. நாய் ஒன்னும் பன்னாது என்றதா இல்லை ஏம்பா ”உனக்கு பில்டிங் ஸ்டராங் ஆனா பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கு போலருக்கே என்றதா தெரியலை. லேசா இருள் சூழ தொடங்க மிதவை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.



திரும்பி வந்த நேரம் மேனேஜர் இல்லாததால் பாலைக் காய்ச்சி வாங்குவதற்குள் என் தாவு தீர்ந்து விட்டது.  அதற்குள் வெள்ளையர்களின் பார் களை கட்டியிருந்தது. பாருக்கு எதிரே ஆற்றில்  மூங்கில் மிதவையை (raft) கட்டி வைத்திருந்தார்கள். அதில் கொஞ்சம் வெள்ளைக்காரர்கள் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். மூங்கில் ராப்ட் பாதி தண்ணீரில் அமிழ்ந்து அமிழாமலும் இருந்தது.

ஆனால் வெஜிடேரியன் தாய் உனவு அவ்வளவு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.  சோயா சாஸ்-ல் எதையாவது மிதக்க விட்டு கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். டின்னர் வந்ததும் எது வெஜிடேரியன் என்றதற்கு,  ஒரு நூடுல்ஸ் ப்ளேட்-ஐ காட்டினார்கள்.  என்னப்பா சிக்கன் மிதக்கிற மாதிரி இருக்கே என்றேன் என்ன புரிந்ததோ வேற ஐட்டங்களாக காட்ட எல்லாத்திலும் வெஜிடபிள் தவிர மற்றது இருந்தது. மானேஜரை தேடினேன், மானஸ்தன் அகப்படவே இல்லை. குழந்தை அழும் போது சும்மா தான் அழும் யாராவது பாப்பாவுக்கு என்னாச்சு என்றதும் கேவிக் கேவி அழுமே அது போல பக்கத்தில வாங்கி சாப்பிட கூட வழியில்லாது காட்டிற்குள் இருக்கிறமே என்ற நினைப்பு பசியை இரட்டிப்பாக்கியது. நாங்கள் ஏதும் சாப்பிடதாது கண்டு கிச்சனில் இருந்த ஒரு வயதான அம்மா என்னா மேட்டர் என்றது. மறுபடியும் முதல்ல இருந்தா என்று என்று எல்லா இஷ்ட தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு சொல்ல, அந்தம்மாவுக்கு புரிந்தே விட்டது. அவசர அவசரமாய் வெஜிடெபிள் நூட்டுல்சு பண்னி எடுத்து வந்தது. பசிக்கு உணவு தருவது போன்ற உன்னதம் இந்த உலகில் வேறு இல்லை என்று அன்று புரிந்தது.