Wednesday 12 January 2011

ஷாருக்கான் -இன்கம்டாக்ஸ்-கங்குலி




The Palm, Jumerirah என்ற கடலுக்கு நடுவே அமைந்த தீவில், கட்டிய ஆடம்பரமான "Signature Villa” வை ஷாருக்கானுக்கு 2007-ல் பரிசாகக் கொடுத்தது நக்கீல் என்ற நிறுவனம். பரிசாக பெற்றதால் அதை அவர் வருமானமாக கணக்கில் காட்டவில்லை.  ஆனால் இந்திய வருமானவரித் துறையோ அதை அவரின் தொழில்சார்ந்த வருமானமாக பார்க்கவேண்டும் என்றும் அதனால் அதற்குரிய வரியைக் கட்டுமாறும் தாக்கீது அனுப்பியது. எனக்கு பரிசாக வந்த வீட்டை நான் எப்படி என் தொழில் சார்ந்த வருமானமாக கருதமுடியும் என்று அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், இவர் எந்த சேவையையும் அந்நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்றும் , அவர் மேல் உள்ள தனிப்பட்ட அபிமானத்தின் பேரில் மேனேஜிங் டைரக்டர் ஓப்பனிங்டே பங்ஷனுக்கு வந்தபோது வழங்கியதாக ஒரு கடிதத்தை அந்நிறுவனத்திடமிருந்து பெற்று வருமானவரித் துறையினருக்கு சமர்பித்தார்.அதை ஏற்றுக் கொள்ளாத ஐ.டி-க்காரர்கள் கம்பெனி என்பது ஆர்டிபீஷியல் ஜூரிஷ்டிக் பர்சனாக மட்டுமே இருக்க முடியும் அதற்கு தனிப்பட்ட அபிமானம் ஏதும் இருக்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். மேலும் அந்நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்-ன் பெயரைப் பயன்படுத்தியுள்ளது அதனால் இதை வெறும் பரிசு என்று கருதமுடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. இது போல் ஏதேனும் ஒரு ப்ராடக்டை அவர் விளம்பரப் படுத்துவதற்கு மிக அதிகமான தொகையை ஊதியமாக பெறுகிறார் என்பதால் இதையும் அது போலத்தான் கருத வேண்டும் என்றும், எழுதப்பட்ட ஒப்பந்தம் எதுமில்லாமல் இது போல் அரேஜ்மெண்டில் வந்த வருமானம் அல்லது சொத்து எதுவாக இருப்பினும் அதை வருமானமாகவே கருத வேண்டும் என்று வரியை கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.



இது செய்தி. மேலே உள்ள பத்தியில்  இருப்பது கலப்படமில்லாத வெறும் செய்தி மட்டுமே. ஆனால் தமிழில் டிடக்டீவ் ஜெர்னலிசம் என்று சொல்லி நம் மண்டையத் தின்னும் பத்திரிகைகள் இந்த செய்தியை எப்படி தரும் தெரியுமா.தமிழ் மசாலா கலந்த மாசுபட்ட செய்தி எப்படி இருக்கும், எழுதியிருக்கிறேன் படித்துப் பாருங்கள்.


இதற்கு கீழே வருபவை முழுக்க முழுக்க கற்பனையே.


ஷாருக்கான் ஐபிஎல்-4 கங்குலியை ஏன் ஓரம் கட்டினார் தெரியுமா என்றபடி வந்தமர்ந்தார் முயலார்.

தயாராக வைத்திருந்த காரட் ப்ளேடை எடுத்து அவர் முன் வைத்தோம்.

காரட்டைக் கொறித்துக் கொண்டே மூனு வருஷத்துக்கு முன்னால ஷாருக்கானுக்கு கிப்டா வந்த ஒரு பங்களா தான் இப்போ கங்குலிக்கு வைத்திருக்கிறதாம் ஆப்பு.

என்ன முயலாரே என்ன சொல்கிறீர் என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

மை நேம் இஸ் கான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அமெரிக்கா செல்லும் வழியில் துபாய் வந்திருந்தாராம். அப்போ அவரின் தீவிர ரசிகரும் நண்பருமான ஒருவர் தான் கட்டிக் கொண்டிருக்கும் 20 கோடி மதிப்பிலான வீட்டைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் இலவசமா எதையும் பெற விரும்பாத ஷாருக் அதை வாங்க மறுத்து விட்டு உடனே கிளம்பிவிட்டாராம்


அட இப்படியும் கூடவா என்று இழுத்தோம்......


முழுதாய் கேளும் என்ற முயலார் தொடர்ந்தார்.

நண்பர் விடவில்லையாம் நான் ஆசை ஆசையாய் கொடுத்ததை வாங்கிக் கொண்டே ஆக வேண்டும் என்று ஏர்போர்ட் வரை வந்து அடம் பிடித்திருக்கிறார். என்ன செய்யறது என்று நெளிந்த ஷாருக் தர்மசங்கடத்துடன் அட்லீஸ்ட் எம் பேரையாவது வச்சுப் புரோமோட் பண்ணுனீங்கன்னா நான் அதை வாங்கிக் கொள்கிறேன் என, நணபரும் சம்மதிக்க,வாங்கிக் கொண்டு அமெரிக்கா பறந்தாரம். அந்த ட்ரிப்-ல் பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் அமெரிக்க விமான நிலையத்தில் அவர் அவமானப் பட நேர்ந்ததும் ரொம்பவே நொந்து போனாராம்.

அதிலிருந்து மீண்டு வந்தாலும் மை நேம் இஸ் கான் வெளியீட்டிலும் ஏகப்பட்ட சர்சைகளில் சிக்கி கொண்டு படாதபாடு பட்டுவிட்டாராம். இப்படி முழி பிதுங்கிய நிலையில் தான் கேரளாவிலிருந்து நம்ம பனிக்கரை தனி விமானத்தில் வரவழைத்து ப்ரசன்னம் பார்த்திருக்கிறார். கடலுக்கு நடுவே இருக்கும் தீவு வீட்டின் வாஸ்து தான் இப்படி இவரை வாட்டி வதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார் பனிக்கர், உடனே நண்பரை செல்-ல் பிடித்த ஷாருக் ஜன்னல், நிலை தண்ணீர் தொட்டியெல்லாம் இடம் மாற்றி வைக்க சொன்னாராம்.

அப்புறம் எல்லாம் சரியாயிடுச்சா என்றோம்.

இல்ல, போன நவம்பரில் தன் குழந்தையின் பிறந்த நாள் விழாவை சந்தோஷமா கொண்டாடிக்கிட்டுருந்தவருக்கு இன்கம்டாக்ஸ் ஆபிசிலிருந்து வரிக்கட்ட சொல்லி போன் வந்திருக்கிறது. நான் தான் எற்கனவே நிறைய கட்டிட்டு தானே இருக்கேன் என்றாராம் கொஞ்சம் சூடாக. அடுத்த முனையிலிருந்த அதிகாரியோ, உங்களுக்கு பரிசா வந்த துபாய் வீட்டுக்கு இன்னும் கட்டலையே என்று கறாராய் பேச, வெறுத்துப் போன ஷாருக் போனைக் பட் என்று கட் செய்திருக்கிறார்.


போன் செய்த அதிகாரிய பற்றி விசாரிக்க, கங்குலிக்கு நெருங்கிய நண்பர் ஆச்சே.... நைட் ரைடர்ஸ் விளையாடினா ஆபிஸ்-க்கு கூட வரமாட்டரே, அவரா உங்ககிட்ட வரி கட்ட சொன்னது என்று வேறு சில அதிகாரிகள் ஆச்சரியப்பட்டார்களாம்.


கங்குலி தான் இந்த வீடு விவாகரத்தை போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது அப்போது தான் ஷாருக்கானுக்கு உறைக்க ரொம்பவே அப்சட் ஆனவர், இன்கம்டாக்ஸ் மேலதிகாரி ஒருவருக்கு போன் போட்டு, நான் கட்டாத வரியா ? பரிசா வந்த வீட்டை எப்படி கணக்கில சேர்க்க முடியும். வரி கட்டறது பெரிசில்ல எங்கள் தூய நட்பை அல்லவா வியாபாரம் என்கிறார்கள் என்று பொரிந்து தள்ள , பொறுமையா கேட்ட அந்த அதிகாரி நீங்க சொல்றதிலும் நியாயம் இருக்கு நான் அவர்கிட்ட பேசுறேன் என்றாராம்.


ஆனால் மறு நாள் காலையில் புதுபடத்தின் டப்பிங்-ல் இருந்தவரை தேடிப்பிடித்து இன்கம்டாக்ஸ், பெனால்டி என்று ஆறு கோடி ரூபாயை உடணடியா கட்ட சொல்லி டிமாண்ட் நோட்டீஸ் கொடுத்து கையெழுத்து வாங்கிப் போனாராம் அந்த விடாக்கண்டனான அதிகாரி.


தனது ஆடிட்டர்களுடன் நிதியமைச்சரையே பார்த்து பேசலாம் என்று புறப்பட்டு போயிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ]PC என்ற சூழலில் இருந்ந்த முகர்ஜி அவரைப் பார்காமலே திருப்பி அனுப்பியிருக்கிறார்.


அந்த வருத்ததில் இருந்த ஷாருக் அமைதியாகவே இருந்திருக்கிறார் நெருங்கியவர்களுக்கு கூட கங்குலி மீது கோபமாக இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். கங்குலி பெயரில் ஏலம் தொடங்கியது எல்லோரும் ஷாருக்-ஐ பார்க்க கேலியாய் சிரித்துக் கொண்டே கங்குலியை யாரும் எடுக்கவில்ல என்று அறிவிக்கும் வரை அரங்கில் இருந்தவர் , பின்னர் விசிலடித்துக் கொண்டே தன் பிஎம்டபுள்யூ-வில் ஏறிப் பறந்தாராம்.
                                               ********        ********           ********


இப்படி டெபிளை விட்டு அசையாமல் மனதுக்கு தோனின படியெல்லாம் செய்தித்தாளில் உள்ள வெவ்வேறு செய்திகளை கனெக்ட் பண்ணி ஒரு ஸ்டோரியை எழுதி விடுவார்கள். சாதரன செய்தியை இப்படி பூதாகரமா மேக்கப் போட்டு கொண்டு வருகிறார்களே என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள். வாசகர்களை படு முட்டாள்களாக நினைத்து ஏன் தான் எழுதுகிறார்களோ தெரியவில்லை. என்னைப் போலவே நீங்களும் சில பல தருணங்களில் இதில் உண்மை 20% பொய் 80% என்று உணர்ந்திருக்கலாம்.


நேரில் இருந்து பார்த்தது போல் எப்படி தான் எழுதுவார்களோ அவர்களுக்கே வெளிச்சம். இரு தலைவர்கள்  தனியா ஒரு அறையில்  சந்தித்தப்ப இருவரின் முகபாவங்கள் எப்படி இருந்தது என்று கூட எழுதுவார்கள்.

வாசகர்களை எழாம் வகுப்பு படிக்கிற சின்னக் குழந்தை போல பாவிக்கும் இந்த ஆட்கள் எப்போ திருந்துவார்கள் ?

நீங்கள் அந்த மாதிரி குப்பைகளை வாங்காதிருக்கும் போது திருந்துவார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்லைன் சந்தா கட்டி படித்து வந்தேன். இப்போ அந்தத் தப்பைச் செய்வதில்லை.

ஜாலிப் பட்டாசு, ஜலீர் ஜிகிர்தண்டா போன்ற வார்த்தை பிரயோகங்கள் என்னை முற்றிலுமாக தமிழ் பத்திரிகைகளிடமிருந்தே ஒதுக்கி விட்டன.


20 comments:

THOPPITHOPPI said...

பத்திரிகை தொழில் எப்போது வியாபாரமாக மாறியதோ அன்றே உண்மை என்பது போய்விட்டது, முழுக்க வருமானத்தை கருத்தில் கொண்டே செய்திகளை வெளியிடுகின்றனர்.

'பரிவை' சே.குமார் said...

//அந்த மாதிரி குப்பைகளை வாங்காதிருக்கும் போது திருந்துவார்கள்.//

சரியாஸ் சொன்னீங்க... ஆனா நாம செய்வோமா?

Unknown said...

வாசகர்களை கவருதல் ஒன்றை மட்டுமே கருத்தாக கொள்ளும் போது, நீங்கள் சொல்லும் பில்டப் இழுவைகள் உண்டாகி விடுகின்றன. வலைப்பதிவிடும் போதும் நாமும் இந்த தவறை செய்கிறோமா என்ற உறுத்தலும் இப்போதெல்லாம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

Unknown said...

இன்றைய பத்திரிக்கைகளின் எழுத்துப்பாணியை நன்றாக உள்வாங்கி, எழுதியிருக்கிறீர்கள். அருமை.

ரிஷபன்Meena said...

தொப்பிதொப்பி,

வேறு எந்த மொழியிலும் வாசகர்களை இவ்வளவு அடிமட்டத்தில் வைத்திருப்பார்களா தெரியவில்லை.

தமிழ் நியூஸ் சானல்கள் கூட தங்களுடைய அரசியல் நிலைபாடுகளுக்கு ஏற்ற செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. பாரபட்சம் இல்லாத செய்திகள் தருவதே இல்லை.

ரிஷபன்Meena said...

சே.குமார்

தங்கள் வருகைக்கு நன்றி

ரிஷபன்Meena said...

பாரத்... பாரதி...

தங்கள் வருகைக்கு நன்றி

Denzil said...

"ஜாலிப் பட்டாசு, ஜலீர் ஜிகிர்தண்டா போன்ற வார்த்தை பிரயோகங்கள் என்னை முற்றிலுமாக தமிழ் பத்திரிகைகளிடமிருந்தே ஒதுக்கி விட்டன". வெறுப்படிக்கும் வார்த்தை பிரயோகங்கள், திணிக்க முயலும் சொந்த கருத்துகள், வர்த்தகம் ஒன்றே குறி, பத்திரிக்கைகள் மட்டுமல்ல, மொத்த மீடியாவின் நம்பகத்தன்மை மிகப்பெரிய கேள்விக்குறியாகிவி்ட்டது. நீங்கள் உணர்ந்ததை மிகச்சரியாக convey செய்துள்ளீர்கள்.

goma said...

முட்டாளாகத் தயாராக சில முட்டாள்கள் இருக்கும் வரை ,
முட்டாளாக்க இருப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

BE THE CHANGE
என்ற முத்தான மூன்று வரிகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்

goma said...

நான் ஒரு ரிஷபி என் பெண் பெயர் மீனா சோ நம் கருத்துக்கள் போவதில் ஆச்சரியமில்லை.

Unknown said...

நீங்க சொன்ன 'ஷாரூக்' கதை சூப்பர்!! :-)

ரிஷபன்Meena said...

Denzil,
தங்கள் வருகைக்கு நன்றி!!

ரிஷபன்Meena said...

//நான் ஒரு ரிஷபி என் பெண் பெயர் மீனா சோ நம் கருத்துக்கள் போவதில் ஆச்சரியமில்லை.//

தங்கள் வருகைக்கு நன்றி!!

ரிஷபன்Meena said...

ஜீ,

தங்கள் வருகைக்கு நன்றி!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லதொரு விஷயம் குறித்து விழிப்புணர்ச்சி பதிவு..

இது போன்று பலரும் வெளிப்படுத்தினால் மாற்றம் வரும்..

ஞாஞளஙலாழன் said...

சரியா சொல்லியிருக்கீங்க ரிஷபன். படித்து முடித்தவுடன் ஒரு பறவை தான் நினைவுக்கு வந்தது.

கரியவன் said...

இந்த பத்திரிகைகள் ஒரு அழகான குழந்தையின் நிர்வாணத்தை கூட வியாபாரபடுதும்.

Victor Suresh said...

Excellent spoof.

புளுகு மூட்டைக் குவியல்கள்தான் நம் தமிழ்ப் பத்திரிகைகள். வேறு வழியில்லாததால் இவைகளைப் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களோ அரசியல் சக்திகளாலேயே நடத்தப்படுவதால் அங்கேயும் உண்மையைக் காண்பது அரிதாக இருக்கிறது. ஆர்வலர்கள் இணையம் மூலமாக செய்திகளை வெளியிட முன் வந்தால் ஏதாவது தீர்வு கிடைக்கலாம். அல்லது நம்மைப் போன்றவர்கள் தவறான செய்திகள், விவஸ்தையில்லாத கருத்துக்கள் ஆகியவற்றைக் கேலியாகவோ, கோபமாகவோ விமர்சித்துக் கொண்டே இருக்கலாம். அப்போதாவது திருந்துவார்களா என்று பார்க்கலாம்.

கண்ணன் said...

ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

அருமையான தகவல் நன்றி சகோ