Thursday, 12 February 2015

ஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)


பயனக் கட்டுரை என்று தலைப்புக் கொடுத்திருந்தாலும் ,இந்தப் பதிவு புகைப்படங்களும் துனுக்குகளுமாகவே இடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணக்கட்டுரையாக எழுத ஆசை தான் ஆனா இந்தப் பதிவு இரண்டு வருடமாக டிராப்ட்-ல் இருந்து வருவதால் அப்படியே வெளியிட்டுவிட்டேன்.


கங்கராமையா டெம்பிள் கொழும்பு
புத்தவிகாரங்கள் தோறும் விநாயகர் சிலைகளைப் பார்க்கமுடிகிறது. மஹாவிஷ்னு மஹாலக்‌ஷ்மி படங்களை பெளத்தர்களின் வீடுகளிலும் கடைகளிலும் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு முருகனும் வழிபடும் தெய்வமே என்ன நமக்கு கந்தன் அவங்களுக்கு ஸ்கந்த.


மெளண்ட் லாவின்யா ஹோட்டல்-கொழும்பு
கடற்கரையை ஒட்டியபடி ரயில் ஓடுவது அழகோ அழகு. கொழும்புவில் இருந்து நுவரேலியா  செல்லும் வழிப்பாதையில் ரயிலில் செல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் பயணத்திட்ட நெருக்கடியால் இந்த முறை முடியவில்லை.




என் மகளும் மிஸஸ் கோமஸ் அவர்களும்
என்னுடன் பனிபுரிந்து தற்போது ஓய்வு பெற்று தற்போது ஸ்ரீலங்காவில் செட்டில் ஆகிவிட்டார். அன்பு என்றால் அதற்கு இவர் தான் அர்த்தம். எங்களுடன் கொழும்புவில் ரெண்டு நாட்கள் செலவிட்டார்.  அத்தனை பெரிய Dehiwala Zoo-ல்  63 வயதிலும்என் மகள் மீனாவைக் கூட்டிக் கொண்டு ஆர்வமாக அவளுடன் பேசிக் கொண்டே வந்தார். கொழும்புவிலிருந்து கண்டி செல்லப் புறப்பட்ட போது, என் மகள் பேசமால் இங்கயே இருக்கலாமில்ல என்றாள். போலித்தனம் இல்லாத அன்பு காட்டுபவர்களை பார்ப்பது அரிது மிஸஸ்.ஜி-யிடம் விடை பெறும் போது அனைவருக்குமே அத்தனை கஷ்டம்.






கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வைரமுத்து ஒரு பாடலில் ”கடல் வாசல் தெளிக்கும் வீடே” என்று எழுதியிருப்பார். கடல் அருகில் ரயில் செல்வதை இங்கே தான் பார்கிறேன். காலை நேர டிராபிக்-ஐ தவிர்க்க வெள்ளவத்த எனும் தமிழர் அதிகமிருக்கும் பகுதி வழியாக சென்றோம்.கொழும்புவிலிருந்து கண்டி செல்லும் வழி நெடுக ஸ்டாரபெரி கடைகள்.மீனாவின் வற்புறுத்தலால் ஒர் கடையில் நிறுத்தினோம். துபாயில் அரை டஜன் 14 திராம்-க்கு வாங்குவோம்.(இந்திய மதிப்பில் 225.) ஆனா கண்டி ரோட்டில் ரூ.50-க்கு அரைக்கிலோ கிடைத்தது. பசுமை பசுமை அது தவிர வேறு இல்லை. மரங்களுக்கு நடுவே கிராமங்களை ஒளித்து வைத்தது போல் அத்தனை அடர்த்தியாய் பரந்து விரிந்திருக்கிறன் மரங்கள்
















Wednesday, 12 January 2011

ஷாருக்கான் -இன்கம்டாக்ஸ்-கங்குலி




The Palm, Jumerirah என்ற கடலுக்கு நடுவே அமைந்த தீவில், கட்டிய ஆடம்பரமான "Signature Villa” வை ஷாருக்கானுக்கு 2007-ல் பரிசாகக் கொடுத்தது நக்கீல் என்ற நிறுவனம். பரிசாக பெற்றதால் அதை அவர் வருமானமாக கணக்கில் காட்டவில்லை.  ஆனால் இந்திய வருமானவரித் துறையோ அதை அவரின் தொழில்சார்ந்த வருமானமாக பார்க்கவேண்டும் என்றும் அதனால் அதற்குரிய வரியைக் கட்டுமாறும் தாக்கீது அனுப்பியது. எனக்கு பரிசாக வந்த வீட்டை நான் எப்படி என் தொழில் சார்ந்த வருமானமாக கருதமுடியும் என்று அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், இவர் எந்த சேவையையும் அந்நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்றும் , அவர் மேல் உள்ள தனிப்பட்ட அபிமானத்தின் பேரில் மேனேஜிங் டைரக்டர் ஓப்பனிங்டே பங்ஷனுக்கு வந்தபோது வழங்கியதாக ஒரு கடிதத்தை அந்நிறுவனத்திடமிருந்து பெற்று வருமானவரித் துறையினருக்கு சமர்பித்தார்.அதை ஏற்றுக் கொள்ளாத ஐ.டி-க்காரர்கள் கம்பெனி என்பது ஆர்டிபீஷியல் ஜூரிஷ்டிக் பர்சனாக மட்டுமே இருக்க முடியும் அதற்கு தனிப்பட்ட அபிமானம் ஏதும் இருக்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். மேலும் அந்நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்-ன் பெயரைப் பயன்படுத்தியுள்ளது அதனால் இதை வெறும் பரிசு என்று கருதமுடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. இது போல் ஏதேனும் ஒரு ப்ராடக்டை அவர் விளம்பரப் படுத்துவதற்கு மிக அதிகமான தொகையை ஊதியமாக பெறுகிறார் என்பதால் இதையும் அது போலத்தான் கருத வேண்டும் என்றும், எழுதப்பட்ட ஒப்பந்தம் எதுமில்லாமல் இது போல் அரேஜ்மெண்டில் வந்த வருமானம் அல்லது சொத்து எதுவாக இருப்பினும் அதை வருமானமாகவே கருத வேண்டும் என்று வரியை கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.



இது செய்தி. மேலே உள்ள பத்தியில்  இருப்பது கலப்படமில்லாத வெறும் செய்தி மட்டுமே. ஆனால் தமிழில் டிடக்டீவ் ஜெர்னலிசம் என்று சொல்லி நம் மண்டையத் தின்னும் பத்திரிகைகள் இந்த செய்தியை எப்படி தரும் தெரியுமா.தமிழ் மசாலா கலந்த மாசுபட்ட செய்தி எப்படி இருக்கும், எழுதியிருக்கிறேன் படித்துப் பாருங்கள்.


இதற்கு கீழே வருபவை முழுக்க முழுக்க கற்பனையே.


ஷாருக்கான் ஐபிஎல்-4 கங்குலியை ஏன் ஓரம் கட்டினார் தெரியுமா என்றபடி வந்தமர்ந்தார் முயலார்.

தயாராக வைத்திருந்த காரட் ப்ளேடை எடுத்து அவர் முன் வைத்தோம்.

காரட்டைக் கொறித்துக் கொண்டே மூனு வருஷத்துக்கு முன்னால ஷாருக்கானுக்கு கிப்டா வந்த ஒரு பங்களா தான் இப்போ கங்குலிக்கு வைத்திருக்கிறதாம் ஆப்பு.

என்ன முயலாரே என்ன சொல்கிறீர் என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

மை நேம் இஸ் கான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அமெரிக்கா செல்லும் வழியில் துபாய் வந்திருந்தாராம். அப்போ அவரின் தீவிர ரசிகரும் நண்பருமான ஒருவர் தான் கட்டிக் கொண்டிருக்கும் 20 கோடி மதிப்பிலான வீட்டைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் இலவசமா எதையும் பெற விரும்பாத ஷாருக் அதை வாங்க மறுத்து விட்டு உடனே கிளம்பிவிட்டாராம்


அட இப்படியும் கூடவா என்று இழுத்தோம்......


முழுதாய் கேளும் என்ற முயலார் தொடர்ந்தார்.

நண்பர் விடவில்லையாம் நான் ஆசை ஆசையாய் கொடுத்ததை வாங்கிக் கொண்டே ஆக வேண்டும் என்று ஏர்போர்ட் வரை வந்து அடம் பிடித்திருக்கிறார். என்ன செய்யறது என்று நெளிந்த ஷாருக் தர்மசங்கடத்துடன் அட்லீஸ்ட் எம் பேரையாவது வச்சுப் புரோமோட் பண்ணுனீங்கன்னா நான் அதை வாங்கிக் கொள்கிறேன் என, நணபரும் சம்மதிக்க,வாங்கிக் கொண்டு அமெரிக்கா பறந்தாரம். அந்த ட்ரிப்-ல் பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் அமெரிக்க விமான நிலையத்தில் அவர் அவமானப் பட நேர்ந்ததும் ரொம்பவே நொந்து போனாராம்.

அதிலிருந்து மீண்டு வந்தாலும் மை நேம் இஸ் கான் வெளியீட்டிலும் ஏகப்பட்ட சர்சைகளில் சிக்கி கொண்டு படாதபாடு பட்டுவிட்டாராம். இப்படி முழி பிதுங்கிய நிலையில் தான் கேரளாவிலிருந்து நம்ம பனிக்கரை தனி விமானத்தில் வரவழைத்து ப்ரசன்னம் பார்த்திருக்கிறார். கடலுக்கு நடுவே இருக்கும் தீவு வீட்டின் வாஸ்து தான் இப்படி இவரை வாட்டி வதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார் பனிக்கர், உடனே நண்பரை செல்-ல் பிடித்த ஷாருக் ஜன்னல், நிலை தண்ணீர் தொட்டியெல்லாம் இடம் மாற்றி வைக்க சொன்னாராம்.

அப்புறம் எல்லாம் சரியாயிடுச்சா என்றோம்.

இல்ல, போன நவம்பரில் தன் குழந்தையின் பிறந்த நாள் விழாவை சந்தோஷமா கொண்டாடிக்கிட்டுருந்தவருக்கு இன்கம்டாக்ஸ் ஆபிசிலிருந்து வரிக்கட்ட சொல்லி போன் வந்திருக்கிறது. நான் தான் எற்கனவே நிறைய கட்டிட்டு தானே இருக்கேன் என்றாராம் கொஞ்சம் சூடாக. அடுத்த முனையிலிருந்த அதிகாரியோ, உங்களுக்கு பரிசா வந்த துபாய் வீட்டுக்கு இன்னும் கட்டலையே என்று கறாராய் பேச, வெறுத்துப் போன ஷாருக் போனைக் பட் என்று கட் செய்திருக்கிறார்.


போன் செய்த அதிகாரிய பற்றி விசாரிக்க, கங்குலிக்கு நெருங்கிய நண்பர் ஆச்சே.... நைட் ரைடர்ஸ் விளையாடினா ஆபிஸ்-க்கு கூட வரமாட்டரே, அவரா உங்ககிட்ட வரி கட்ட சொன்னது என்று வேறு சில அதிகாரிகள் ஆச்சரியப்பட்டார்களாம்.


கங்குலி தான் இந்த வீடு விவாகரத்தை போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது அப்போது தான் ஷாருக்கானுக்கு உறைக்க ரொம்பவே அப்சட் ஆனவர், இன்கம்டாக்ஸ் மேலதிகாரி ஒருவருக்கு போன் போட்டு, நான் கட்டாத வரியா ? பரிசா வந்த வீட்டை எப்படி கணக்கில சேர்க்க முடியும். வரி கட்டறது பெரிசில்ல எங்கள் தூய நட்பை அல்லவா வியாபாரம் என்கிறார்கள் என்று பொரிந்து தள்ள , பொறுமையா கேட்ட அந்த அதிகாரி நீங்க சொல்றதிலும் நியாயம் இருக்கு நான் அவர்கிட்ட பேசுறேன் என்றாராம்.


ஆனால் மறு நாள் காலையில் புதுபடத்தின் டப்பிங்-ல் இருந்தவரை தேடிப்பிடித்து இன்கம்டாக்ஸ், பெனால்டி என்று ஆறு கோடி ரூபாயை உடணடியா கட்ட சொல்லி டிமாண்ட் நோட்டீஸ் கொடுத்து கையெழுத்து வாங்கிப் போனாராம் அந்த விடாக்கண்டனான அதிகாரி.


தனது ஆடிட்டர்களுடன் நிதியமைச்சரையே பார்த்து பேசலாம் என்று புறப்பட்டு போயிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ]PC என்ற சூழலில் இருந்ந்த முகர்ஜி அவரைப் பார்காமலே திருப்பி அனுப்பியிருக்கிறார்.


அந்த வருத்ததில் இருந்த ஷாருக் அமைதியாகவே இருந்திருக்கிறார் நெருங்கியவர்களுக்கு கூட கங்குலி மீது கோபமாக இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். கங்குலி பெயரில் ஏலம் தொடங்கியது எல்லோரும் ஷாருக்-ஐ பார்க்க கேலியாய் சிரித்துக் கொண்டே கங்குலியை யாரும் எடுக்கவில்ல என்று அறிவிக்கும் வரை அரங்கில் இருந்தவர் , பின்னர் விசிலடித்துக் கொண்டே தன் பிஎம்டபுள்யூ-வில் ஏறிப் பறந்தாராம்.
                                               ********        ********           ********


இப்படி டெபிளை விட்டு அசையாமல் மனதுக்கு தோனின படியெல்லாம் செய்தித்தாளில் உள்ள வெவ்வேறு செய்திகளை கனெக்ட் பண்ணி ஒரு ஸ்டோரியை எழுதி விடுவார்கள். சாதரன செய்தியை இப்படி பூதாகரமா மேக்கப் போட்டு கொண்டு வருகிறார்களே என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள். வாசகர்களை படு முட்டாள்களாக நினைத்து ஏன் தான் எழுதுகிறார்களோ தெரியவில்லை. என்னைப் போலவே நீங்களும் சில பல தருணங்களில் இதில் உண்மை 20% பொய் 80% என்று உணர்ந்திருக்கலாம்.


நேரில் இருந்து பார்த்தது போல் எப்படி தான் எழுதுவார்களோ அவர்களுக்கே வெளிச்சம். இரு தலைவர்கள்  தனியா ஒரு அறையில்  சந்தித்தப்ப இருவரின் முகபாவங்கள் எப்படி இருந்தது என்று கூட எழுதுவார்கள்.

வாசகர்களை எழாம் வகுப்பு படிக்கிற சின்னக் குழந்தை போல பாவிக்கும் இந்த ஆட்கள் எப்போ திருந்துவார்கள் ?

நீங்கள் அந்த மாதிரி குப்பைகளை வாங்காதிருக்கும் போது திருந்துவார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்லைன் சந்தா கட்டி படித்து வந்தேன். இப்போ அந்தத் தப்பைச் செய்வதில்லை.

ஜாலிப் பட்டாசு, ஜலீர் ஜிகிர்தண்டா போன்ற வார்த்தை பிரயோகங்கள் என்னை முற்றிலுமாக தமிழ் பத்திரிகைகளிடமிருந்தே ஒதுக்கி விட்டன.


Friday, 24 December 2010

படங்களாய்-இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

தூக்கம் வாழ்க்கைக்கு எத்தனை இன்றியாமையாதது. இங்கே சில தூக்கங்கள்.

உட்கார்ந்து தூங்குவது போல சுகம் உலகில் வேற எதாவது உண்டா ? எனக்கு எதாவது பிடிக்கலைன்னா உடனே தூங்கிடுவேன். நீங்க தவில் வாசிங்க நான் தூங்கனும் என்பாரே செந்தில் , அது மாதிரி இந்தப் பையனுக்கு யாராவது விஜய் படம் போட்டுட்டாஙகளோ



தூங்கும் போது வேற எந்த நினைப்பும் இல்லாம தூங்கனும், இல்லைன்னா இப்படித் தான் கனவில் எதையாவது பிடிக்கக் கிளம்பற மாதிரி ஆகும்


Publish Post
சும்மா தூக்கம் வரலை ......... அது தான்

படங்கள் : நன்றி யூ ட்யூப்

Thursday, 23 December 2010

வாஃபி(Wafi) மால்-கிறிஸ்துமஸ் ம்யூசிக் அண்ட் லைட் ஷோ




ஷாப்பிங் மால் அத்தனயும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு கலை கட்டியிருப்பது  வாடிக்கை தான்.  பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைத்து  பார்க்குமிடமெல்லாம் நமக்குள்ளே ஒரு பெஸ்டிவல் உணர்ச்சியை தினிக்கும் வன்னம் அலங்காரம் செய்தும் இருப்பார்கள்.

நேற்று வாஃபி மால் சென்றிருந்தேன். வாஃபி மால் எகிப்து பிரமிட் போலவே தோற்றம் உடையது, பிரமிட் போன்றே கட்டப்பட்ட மாலின் வாசலில் Egyptian Pharaohs சிலைகளும் இருக்கும். கார் பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளி வருகையில் லைட் ஷோ அறிவிப்பு பார்த்து அங்கேயே வெயிட் பண்ணினேன்.
மணிக்கு ஒரு தரம் அந்த ஷோ பத்து நிமிடங்களுக்கு நடக்கிறது. 

வெளிப்புற சுவற்றில் லேசர் லைட் வைத்து அதகளம் பண்ணினார்கள். சில சமயம் தியேட்டரில் பார்க்கும் படம் போலவே இருந்தது. விளக்குகளை வைத்து இருக்கும் பொருளை மறைய வைக்க முடியுமா ? முடியும் Egyptian Pharaohs சில சமயங்களில் மறைந்தே போனது, சில சமயம் அவைகளும் ஆட்டத்தில் கேரக்டர்களாக ஆனது.  இந்த ஷோ நடந்த போது மால் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் உள்ளே செல்வதும் வருவதுமாக இருந்தார்கள் ஆனால் அதனால் தெரிகிற காட்சிக்கு ஒரு இடையூரு கூட இல்லாதிருந்தது.


லேசர் விளக்குகளால் நடந்த அந்த ஷோவின் யூ ட்யூப் வீடியோ தொடுப்பு தான் மேலே கொடுத்திருப்பது. நல்ல புரபஷனல் நபர் எடுத்திருக்கிறார். அதனால் பில்டிங் மேல் விளக்கு அடிக்கப் படுவது தெளிவாக தெரிகிறது.

நான் சோனி சைபர் ஷாட்டில் எடுத்ததை கீழே இனைத்துள்ளேன். நான் நேர்த்தியாக எடுக்காததால் எதோ சினிமா தியேட்டரில் ஒடுகிற  படம் மாதிரி வந்திருக்கிறது.புரபசனலாக எடுத்ததை விட என்னுடைய கவெரேஜ் நன்றாக வந்துள்ளது.( என்று நான் நினைக்கிறேன், பீ கேர் புல்)  சில சமயம் அதிக விஷயம் தெரியாமல் இருப்பதும் நல்லதுக்கு தான் போலருக்கு. சில வினாடிகள் கொஞ்சம் டார்க் ஆக தெரியும்,அதன் பிறகு வரும் காட்சிகள்  ஓ.கே( உங்களுக்கே பழகிவிடும்)






Monday, 20 December 2010

Flower Power- ‘Dutch Auction’

Perishable goods என்ற வகையில் வரும், பறித்த சில மணி நேரத்திலேயே வாடிவிடக் கூடிய பூக்களை எப்படி தான் இப்படி மெருகு குழையாமல் துபாய் கொண்டு வந்து விற்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும். இங்கே வரும் பூக்கள் பெரும்பாலும் ஹாலந்தில் இருந்து தான் வருகின்றன. இத் துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது நிறைய விஷயங்கள் எனக்கு இண்ட்ரஸ்டிங்காப் பட்டது




வியாபரிகளிடம் பூக்களை விற்கும் போது சரியான விலை கிடைக்காததை கண்ட பூக்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூட்டாக சேர்ந்து உருவாக்கிய அமைப்பு தான் ப்ளோரா ஹாலந்து. இது ஒரு கோப்ரேட்டிவ் சோசைட்டி, உறுப்பினர்களுக்காக லாப நோக்கின்றி இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது.உலகின் 60சதவிகித பூக்களின் வர்த்தகம் இதன் மூலமே நடக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் 20 மில்லியன் பூக்கள் தங்கள் உரிமையாளர்களை “ப்ளேரா ஹாலந்து”-ல் சத்தமில்லாமல் மாற்றிக் கொள்கின்றன தெரியுமா ? இது தினம் தினம் திரும்ப நடக்கிற ஒரு நிகழ்வு. post harvest management -ம் ”சப்ளை செயின் மேனெஜ்மெண்ட்” திறம்பட இருப்பதே இதன் வெற்றியை உறுதி செய்கிறது.

ஏலம் விடும் முறையில் புதுமை

தினம் தினம் நடக்கும் ஏலத்திலும் ஒரு புதுமை இருக்கிறது. இங்கே ஒரு தரம் இரண்டு தரம் என்று கூவுகிற பிசினஸ் எல்லாம் கிடையாது. இந்த ஏல முறையை ஆக்‌சன் க்ளாக் என்கிறார்கள். அதிக பட்ச விலையில் க்ளாக் ஒடத் துவங்கும் எந்த விலை வர்த்தகருக்கு ஒ.கே யோ அந்த விலையில் க்ளாக்கை நிறுத்துவார், அதிக பட்ச விலையிலிருந்து ஆரம்பித்து குறைந்து கொண்டே வரும், எந்த விலை வர்த்தகருக்கு சரியானதாக தெரிகிறதோ அப்போது பஸ்சரை அழுத்த அந்த ”லாட்” அந்த விலையில் அவருக்கு வழங்கப்படும். ஒரு நாளைக்கு 39 ஆக்சன் க்ளாகுகள் இயங்கும். டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனதைத் தொடர்ந்து இந்தக் க்ளாக்குகளில்  இண்டெர்னெட் மூலமும் பங்கு பெற முடியும். ஏலம் முடிந்த 1 மணி நேரத்திற்குள் பூக்களை டெலிவரி செய்துவிடுவார்களாம்.

தரம் நிரந்தரம்
ஏலத்திற்கு பூக்களின் போட்டோக்களை திரையில் காட்டுவார்கள் கூடவே அந்தப் பூ சப்ளையரின் BI index- ம் டிஸ்ப்ளே ஆகுமாம்.

ஆமா அது என்ன index ?

ஃப்ளோரவின் வழிகாட்டுதல்களின் படி பூக்கள் வளர்க்கப்பட்டு சரியான முறையில் பாக்கிங் செய்யப்பட்டு  இருக்க வேண்டும். அந்த வழிகாட்டுதலை பூ சப்ளையர் பின்பற்றும் லெவலுக்கு ஏற்ப  BI index எண்கள் அந்த சப்ளையருக்கு வழங்கப்படும். அந்தப் பூக்காரர் வொர்த்தா இல்லையா என்று இந்த  BI index  சொல்லிவிடும். இந்த  BI index  என்பது நிரந்தரமாக இருப்பது சப்ளையர் கையில் தான் இருக்கிறது. தரமற்ற பூக்களை சந்தைக்கு கொண்டுவந்தால் அவரின் index-தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் குறைக்கப்படும். இந்த BI (reliability index) -ஐ பொறுத்தே அந்த பூக்களுக்கு விலையும் என்பதால் தரம் நிரந்தரமாக பேனப்படுகிறது

ப்ளோரா ஹாலந்து -ன் தலமையகம் ஆல்ஸ்மீரில் இருக்கிறது. 990,000 சதுரடியில் உள்ள இந்தக் கட்டிடத்துக்கு உலகின் மூன்றாவது பெரிய கட்டிடம் என்ற பெருமையும் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கே 20 மில்லியன் பூக்களை விற்கிறார்கள். உலகின் 60 சதவிகித பூ வர்த்தகம் இங்கே தான் நடக்கிறது. ஹாலந்தில் விளையும் பூக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் காலப்போக்கில் கென்யா, ஈக்வேடார், எத்தியோப்பியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிலிருந்து வரும் இருந்து பூக்களை பெற்று சந்தைப் படுத்தவும் செய்கிறது.


இந்த மாதிரி ஏலம் பூக்களை வாங்குபவர்களுக்கு அவர்கள் டிமாண்ட்டுக்கு தகுந்த விலையில் பூக்கள் கிடைக்க ஏதுவாக இருக்கிறது. உதாரணத்துக்கு மதுரையில் சித்திரை திருவிழா சமயத்தில் அதிகமான கூட்டம் கூடுவதால் பூக்களுக்கு மிக அதிக டிமாண்ட் இருக்கும் அப்போ மதுரை வர்த்தகர் அதிக விலையில் அந்த ”லாட்”ஐ எடுக்கலாம். வேற ஊர் வர்த்தகருக்கு அந்த டிமாண்ட் இல்லாதிருப்பதால் அந்த க்ளாக்-ல் மதுரைக்கு வழிவிட்டு ஒதுங்கிவிடுவார். அடுத்த க்ளாக்களில் அவர்களுக்கு தகுந்த விலையில் பெறுகிறார்கள். இந்த முறையினால் விளைவிப்பவர்களுக்கு சரியான விலை கிடைத்து விடுகிறது. நம்ம ஊர் மாதிரி விவாசாயம் செய்யும் சாதாரான ஆட்கள் வர்த்தகர்களிடம் போராட வேண்டிய நிலை அங்கில்லை. நம்ம ஊரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அது இது என்று கண்ணில் தெரிந்தாலும் சாதரான விவசாயியின் நிலையில் எதுவும் முன்னேற்றமே இல்லாததால் அவை சிறப்பாக நடை பெறவில்லையோ என்ற சந்தேகமே எனக்கு இருக்கிறது.




லோக்கல் டெலிவரி என்றால் ஒரு மணி நேரத்திலும், வெளிநாடுகள் என்றால் அதிகபட்சமா 24 மணிநேரத்திலும் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்டெய்னர்களில் அனுப்புகிறார்கள்.குறிப்பிட்ட நேரத்தில் பூக்கள் வந்து சேர்வதில் தான் இந்த வர்த்தகத்தின் வெற்றியே இருப்பதால் போஸ்ட் ஹார்வஸ்ட் மேனேஜ்மெண்ட்-ல் அதிக கவனம் செலுத்துவதால் வரையறுக்கப்பட்ட முறையில் பாக்கிங் செய்யப்பட்டு கொஞ்சம் கூட வாடாமல் வதங்கமால் பயணாளரை சென்று அடைகிறது.



ஆனால் இதிலும் பிரச்சனை இல்லாமல் இல்லை. வளர்ந்த நாடு என்பதால் நிலத்தின் விலை பண்மடங்காக இருப்பதாலும், தொழிலாளர் ஊதியம் அதிகமாக இருப்பதாலும்,அதிகமான மார்டனைஷேசனாலும் அதன் உற்பத்தி செலவு அதிகமாகி இருக்கிறது. ஆகையால் ஐரோப்பாவை தாண்டி ஹாலந்து ப்ளவர்களுக்கு தற்போது மவுசு குறைந்து போயிருக்கிறது.


நம்ம நாட்டில் பல நல்ல பூ, கனி வகைகள் உண்டு, அதை இது போல் சந்தைப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும். விளை நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றாமல் விவசாயிகளுக்கு உன்மையான ஊக்கமும் வழிகாட்டுதலும் இருந்தால் நம் விவசாயிகள் நிலை உயர்வதோடு தேர்தல் நேரங்களில் அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டியும் வராது.

மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் இந்த லிங்க்-ல் பார்க்கலாம்.

http://www.floriculturetoday.in/Horticulture-offers-win-win-situation-for-Indo-Dutch-Cooperation.html

படங்கள்: நன்றி Flora Holland.com

Tuesday, 14 December 2010

”வாடி உராயா” நீர்வீழ்ச்சி (Wadi Wurayah Waterfalls)


எனக்கு டைரி எழுதும் வழக்கம் கிடையாது.  ஆனால் நல்ல மறக்க முடியாத பயணங்களைப் இப்படி பயணக் கட்டுரை போன்று எழுதிவிடுவது  தற்போது வழக்கமாகி விட்டது. வெட்டியாய் நேரத்தைக் கழிக்க விரும்பதவர்களுக்கு இதற்கு மேலே படிப்பதற்கு ஒன்றும் இல்லை. யூஏஇ -ல் வசிப்பவர்களுக்கு இதை வாசிக்கப்  பிடிக்கலாம்.




சேர்ந்தார் போல் ஐந்து நாட்கள் லீவு வந்த போது எங்கேயாவது வெளியில் போகாது வீட்டில் இருக்க மனம் இல்லை. யூஏஇ-ல் Kalba, Khorfakkan, Fujairah, (தமிழில் எழுதினால் ஒரு மார்க்கமா இருக்கும்)  போன்ற இடங்களை விட்டா பிக்னிக் என்று எங்கே போக இடமிருக்கு என்று நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,  Dibba பக்கத்தில் ஒரு அருவிக்கு நண்பர்கள்சேகர்,முருகப்பன்,கண்ணன்,  என  பலர் இனந்து பெரிய குரூப்பாக போவதாகத்  தெரியவர அவர்களுடன் இனைந்து கொண்டேன். 

அந்த இடத்துக்கு பேர் ”வாடி உராயா அருவி”, பாத்தீங்களா சொன்னேன் இல்ல தமிழ்ல வேனாம்னு,  ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் Wadi Wurayah Waterfalls இனி அதை WWW என்றே குறிப்பிடலாம்.

தனியே தன்னந்தனியே என்று இருக்க வேணாம் என்று தான் எல்லோரும் சேர்ந்து செல்வதே என்பதால், லூலூ செண்டர் எதிரே அவரவர் கார்களைப் பார்க் செய்து விட்டுக்  கிளம்பினோம். குரூப்பாக சேரும் போது பலதரப்பட்ட ரசனைகள் ஒன்று சேர்வதால் வருகிற கலகலப்பு ஒரிரு குடும்பங்களாக சேர்ந்து போகும் போது வரவே வராது அல்லவா. புறப்படுவதற்கு முன்னரே, அருவியில் தண்ணியெல்லாம் இருக்கான்னு தெரியாது. நம்ம பஸ்லேயே போக முடியாமான்னும் தெரியாது போவோம் அப்படி அது சரி வராட்டி ”பீச்” எதிலாவது செட்டிலாகிடுவோம் என்றே புறப்பட்டோம். ஒன்று கூடி பயணிப்பதே குறிக்கோள் "அருவி"யோ "பீச்"சோ அதெல்லாம் பை புராடெக்ட் மாதிரித் தான்.

வண்டியில் ஏறியதும்  ராஜ்குமார்  தான் கொண்டு வந்திருந்த இளையராஜா கலெக்சனைத் தவழ விட்ட போது ,ரொம்ப நாள் கேட்காதிருந்த பல பாடல்களைக் கேட்க முடிந்தது. இளையராஜா உச்சத்தில் இருந்த போது,  அவரை இசை ஞானி என்பதும், அவர் போட்டோவை போஸ்டரில் போடுவதுமாக ஏக அமர்களப்படுமே அப்போதெல்லாம் ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியோ என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் அந்த தேனினும் இனிய  பாடல்களைக் கேட்ட போது அடடா இந்த இளையராஜாவை எத்தனை புகழ்ந்தாலும் அது தகும் என்றிருந்தது.

நம்ம டிரைவர் தான்
எங்களுக்கு கிடைத்த டிரைவர் தெய்வமா பார்த்து கொடுத்த கொடை. ஆடியோ வால்யூம் பட்டனை என்ன பச்சடி வைத்தாலும் அது உங்க ஏரியா என எதையும் கண்டு கொள்ளாது,தன் கடமையே கண்ணாக இருந்தார். பாகிஸ்தானியரில் இப்படி ஒரு பச்சக் குழந்தைய இப்ப தான் பார்கிறேன். ஆனா எல்லா லாங்வேஜ்-லும் அவருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ’ஸ்பீடு”தான் போலருக்கு. "ஸ்பெக்ட்ரம்" அளவுக்கு பணம் கொடுத்தாக் கூட 65 கி.மீ வேகத்துக்கு மேல ஓட்டவே மாட்டேன்னுட்டார். விஜய் பாட்டு எதாவது போட்டா டிரைவர் சுறுசுறு துருதுரு ஆவாரோ என்ற என்னம் வந்ததால், யாரிடமாவது இருக்கா என்று கேட்டேன், விஜய் பாட்டெல்லாம் நாங்க கேட்கிறதில்லன்னுட்டாங்க. அவரு படம் தான் மட்டமா இருக்கும் ஆனா பாட்டெல்லாம் நல்லா இருக்குமே, சே! இந்த மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

நண்பர் முருகப்பனுக்கும்  டிரைவரு-க்கும் டெலிபதி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. காலை உணவுக்கு நல்ல நிழல் பார்த்து நிறுத்த, ரைட்லன்னு நம்மவர் நினைச்சா போதும் ரைட்டில் டமால்னு ஒரம் கட்டிடுவார். இது ஆவாது வேற எடத்துக்கு போவோமா என்று தமிழில் பேசினால் கூட புரிந்து கொண்டு வண்டியைரோட்டில் இறக்கிடுவார். இவருக்கு இவ்வளவு புரியுதே, நடுவில் எங்காவது எந்திரன் பாட்டு இருந்தா போடு மச்சின்னு தமிழில் பேசப் போறாரோ என்று பயந்து கொண்டே சென்றேன்.

வழியில் எதோ ஒரு "வாடி" ("வாடி" என்றால் நீரோடை அல்லது காட்டாறு என்று  சொல்லலாம்)  என்ற ஊரில் காலை உணவுக்கு கடை விரித்தோம். அதிகாலையில் எழுந்து நானாவித ஐட்டங்கள் செய்து எடுத்து வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

மறுபடியும் WWW நோக்கி புறப்-பட்டோம். பாட்டுக்களை  நிறுத்தி விட்டு பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தார்கள். வண்டிக்கு பிற்பகுதி ஒரு அணியாவும் முன் பக்கம் இருந்தவர்கள் ஒரு அணியாக-வும் பட்டையக் கிளப்பினார்கள். அணி பிரிக்கும் போது ஆட்டத்துக்கு இல்லாதவர்கள் என்ற ஒரு பிரிவு இல்லாததால் நான் ஒரு டீம்-ல் எண்ணிக்கைக்காக இருந்தேன். எப்படி தான் இத்தனை பாடல்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று வியக்க வைத்தார்கள். சரி நாமளும் பாடுவோம்ல என்று ஒரு எழுத்துக்கு ("ம"தான் ) எதாவது பாடலை ஞாபகத்தில் கொண்டுவர முயற்சி செய்தேன். ம்ஹீம்.... அந்த எழுத்தில் தமிழ் பாட்டே இல்லை என்று என் மூளை எரர் மெஸேஜ் தந்துவிட்டது. சரி இது நமக்கு ஆவறதில்லை என்று அமர்ந்து கொண்டேன்.

சில சமயம் பாகப்பிரிவினைல சிவாஜி சோகமா பாடுவாரே அதென்ன பாட்டு என்று நண்பர் ராஜ்குமார் கேட்பார், சீரியஸா முகத்தை யோசிக்கிற மாதிரி வச்சுக்கிட்டு இருப்பேன் அதற்குள் அவருக்கே ஞாபகம் வந்துவிடும். எழுத்துக்கள் வைத்து பாடியது பத்தாது என்று பூ, நிறம், கல்லூரி,நடிகர்கள் நடித்த பாடல்கள் என்று நிறைய வெரைட்டிகளில் பாடினார்கள்.   (விஜய் படப் பாடல்களை சாய்ஸ்-ல் விட்டுவிட்டார்கள்-என்னா வில்லத்தனம்). நான் அவ்வளவுக்கு வொர்த் இல்லை என்று புரியாத ராஜ்குமார் , ஒரு முருகன் பாட்டு சொல்லுங்க என்றார். எவ்வளவு ஈசியா கேட்கிறார் என்ற சந்தோஷத்தில் நான் ”நிஜமான பக்திப் பாட்டை” சொல்ல வெறுத்துப் போனார்,சினிமாவில் வந்த சாமி பாட்டுங்க என்றவர் அப்புறம் என் பக்கம் திரும்பவே இல்லை. துபாய் திரும்பும் போது இதே பாட்டுக்குப் பாட்டு தொடர்ந்தது , நான் மெதுவா தூங்குவது போல் ஆக்ட் பண்ணிக் கொண்டே தூங்கிவிட்டேன்.

Kalba corniche ரொம்ப அழகான ஒன்று. இங்குள்ள பார்க் எனக்கு மிகவும் பிடித்த  இடம். 3 வருடத்துக்கு முன்பு வந்த எதோ ஒரு பெண் பெயர் கொண்ட புயல் (அதென்ன புயல்களுக்கு எப்போதும் பெண் பெயரே வைக்கிறார்கள்?) இந்தப் பார்க்கை வாரிக் கொண்டு போய்விட, கொஞ்ச நாள் பொழிவிழந்து கிடந்தது. மறுபடியும் முன்பை விட நன்றாக புதுப்பித்து விட்டார்கள். குழந்தைகள் விளையாட இது போல கூட்டம் இல்லாத, அதே சமயம் நிறைவான எக்யூப்மெண்ட்கள் உள்ள ஒரு இடம் வேறு இல்லை. சாதாரன வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் இருக்காது ஆனால் இந்த லீவு சமயத்திலும் காத்து வாங்கிக் கொண்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் குழந்தைகளை விளையாட விட்டு விட்டு காலாற நடந்தோம்.

மீன்டும் WWW நோக்கிப் பயணப்பட்டோம். Khorfakkan தாண்டியதும், எங்கப்பா இங்கிருந்த மேப் என்று கண்ணன் தேட, என்ன புரிந்ததோ எங்க டிரைவர் வண்டியை ஓரங்கட்டினார். முன்னால் காரில் வந்த நண்பர் முருகப்பன் மேப்-க்காக தான் வெயிட் பண்ணியிருக்கிறார். ஆனா கடைசி வரை அது சிக்கலை, சிட்டிசனில் கிராமத்தை தேடுகிற அஜித் குழு போல சரி நாம உத்தேசமா கிளம்புவோம் என்று புறப்பட்டோம். (அந்தப் படத்தில் மேப்லேயே கிராமம் இருக்காது பாவம்).  ஏம்பா நிஜமாவே அப்படி ஒரு அருவி இருக்கா இல்ல வடிவேலு கிணற்றை தேடற மாதிரி அத்துவான காட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்பிடப்போறீங்களா என்று கேட்க நினைத்த என் ஆர்வத்தை அடக்கிக் கொண்டேன். மலையாளி இருக்க பயம் ஏன், ஒரு மலையாளி கடையில் விசாரிக்க அழகு போல வழி சொன்னார்கள்.

அமானுஷ்ய அமைதி தவழ்ந்த  ஹஜார் மலைப்பகுதி பள்ளத்தாக்குப் பகுதியில் வண்டி பயணிக்க, திரு.சேகர் என்னப்பா இது நம்மளை எங்கயோ கடத்திட்டு போற மாதிரி இருக்கே, இந்தாங்க கன்சைன்மெண்ட் வந்தாச்சு என்று யாரிடமாவது ஒப்படைத்து விட்டு போகப் போகிறார்கள் என்றார். டிரைவர் மானஸ்தன், எதைப் பற்றியும் கவலைப் படாமல்,  எங்கே செல்லும் இந்தப் பாதை என்று ஒட்டிக் கொண்டிருந்தார், இப்போ அவரைக் கண்ணன் கஷ்டப்பட்டு இயக்கிக் கொண்டிருந்தார்.ஒரு வழியாய் www வந்தடைந்தோம்.

தாழ்வான பாலத்தின் அருகே விரல் விட்டு என்னக் கூடிய அளவுக்கு சில பஸ்களும் கார்களும் இருந்தன. தண்ணீர் அபாயம் என்ற போர்ட் அருகே வண்டியை நிறுத்தினோம். இரண்டு மலைகளுக்கு நடுவே ஒடும் நதி அல்லது நீரோடை வழியில் (மழை பெய்தால் மட்டும் நீர் வருமாம்) கிட்டத்தட்ட 4 கி.மீ சென்றால் அருவி வருமாம்.ஆற்றுப் பகுதியில் சில 4x4 க்கள் சென்றன. ஒரு பாகிஸ்தானி வாடகைக்கு டிரிப்படித்துக் கொண்டி-ருந்தார். அந்த ஆளிடம் நீயா நானா ரேஞ்சுக்கு பேசி தோதான விலைக்கு பிடித்தோம்.  எங்களில்சிலர் அதில் வர நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.  ஹஜார் மலை பரந்து விரிந்தி-ருந்தது. நம்ம ஊர் மலைகள் இந்த மலைகளை தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொள்ளுமா என்று தெரியாது.

குட்டிக் கற்களும் மன்னும் கலந்த ஒரு கலவையான மலை. சில இடங்களில் அழுக்குக் கலரிலும் சில இடங்களில் செந்நிறத்திலும் இருந்தது. ஆனாலும் அழகாகத் தான் இருந்தது, இயற்கையில் எது தான் அழகில்லை. நதியில் மணலுக்கு பதில் சிறிதும் சற்றே பெரிதுமான கூழாங்கற்கள் பரவிக் கிடந்தது. நதி நெடுகும் வழுவழு கூழாங்கற்களை யரோ பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்தது போல இருந்தது. பார்பதற்கு அழகோ அழகாக தெரிந்தது.

இரண்டு பக்கமும் நெடுதுயர்ந்திருந்த மலைகளாக இருந்ததால் நடந்து போக நல்ல நிழல் இருந்தது. வளைந்து நெளிந்து சென்ற பாதை முழுதும் அழகான காட்சிகளாக விரிந்தது ஹஜார் மலை. ஒரு சில 4x4 எங்களைக் கடந்து சென்றது. நடக்க நடக்க தூரம் நீண்டு கொண்டே இருப்பதாக தோன்றினாலும், நடப்பதற்கு அருமையாக இருந்தது. நடக்கும் வழி பூராவும் தேனீயிலும் சேர்க்க முடியாத குளவியிலும் சேர்க்கமுடியாத ஒரு பூச்சி, கன்னத்தில் வந்து அப்பிக் கொண்டு படுத்தி எடுத்தது. இது வரை  விலங்கியலார்களால் அறியப்படாத புது பூச்சி வகைகள் இந்த மலைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக  Gulf News-ல் ஒரு முறை படித்ததாக  ஞாபகம். இதே மலைப் பகுதியில் நிறைய அரிய வகை வன விலங்குகளும் இருக்கின்றனவாம்.

கடைசியாய்  WWW வந்தடைந்தோம். இத்தனை தூரம் தரைவழியாய் நடக்காமல் மலை முகடு வரை காரில் சென்று அங்கிருந்து அதிரடியாய் செங்குத்து சரிவில் இறங்கிக் கொண்டிருந்தார்கள் பாகிஸ்தானியர்கள். அருவி சோ வென்று கொட்டிக் கொண்டிருந்தது அருகில் செல்ல முடியவில்லை ரொம்ப ஆழமாம். நாங்கள் கொஞ்சம் எட்ட இருந்தே அந்த குளம் போன்ற பகுதியில் குளித்தோம். ப்ரஷ் வாட்டர் அருவி வருடம் முழுதும் அந்த இடத்தில் கொட்டுவது ஆச்சரியம் தான். தண்ணீரை வீனாக்காமல் பைப் மூலம் எங்கோ கடத்துகிறார்கள்.



மேலே பார்க்கும் படத்தில் மலையுடன் மலையாய், பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானிகள், நாட்டை விட்டு வரும் போதே என்ன கஷ்டம் வந்தாலும் சரி சத்தியமா   குளிக்க மட்டும் மாட்டேன் தாயே  என்று  சத்தியம் ஏதும் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல.

அவர்கள் மலையிலிருந்து செங்குத்தாய் இறங்குவதையும்  வண்டிகளில் அவசர அவசரமா செல்வதையும் பார்த்த நான் கூட,  குளிக்கத் தான் போறாங்களோ ? இவனுகளோட போய்  எப்படிக் குளிக்கப் போறோம்னு  ஒரு விதமான தயக்கத்துடனே தான் நடந்து கொண்டிருந்தேன். ஆனா ஒரு புள்ளை கூட இறங்கவே இல்லை, ஜாதிக் கட்டுப்பாடோ என்னவோ ?


ரூட்: Kalba  - Fujairah - Khofakkan-லிருந்து Dibba செல்லும் வழியில் இரண்டாவது round about -க்கு அடுத்து வரும் யூ டெர்னில் திரும்பி, அடுத்த  வலது கட்-ல் நேரா செல்லவேண்டும். ஆளரவமற்ற பகுதி என்பதால் இந்த இடத்துக்கு ஒரிரு காரில் செல்வது அத்தனை பாதுகாப்பானது இல்லை என்று எச்சரிக்கப் படுகிறீர்கள்.












.





Saturday, 11 December 2010

Saturday, 20 November 2010

தீபாவளி சில படங்கள்


Mankhool -Bank Street  பின்புறம்
சின்ன வயதில் தீபாவளி எத்தனை நாளில் வருது  வருது என்று எண்ணி எண்ணியே கை விரல் ரேகை தேய்ந்ததுண்டு.  ஒரு மாதத்திற்கு முன்பே தயாராக இருக்கும் புதுத் துணிகளை எடுப்பதும், வீட்டிற்கு வருபவர்களுக்கு காட்டுவதும் தனிப் பொழுது போக்கு தான். நிறைய அண்ணன்களுடன் கடைசி தம்பியாய் பிறந்ததால் வருடத்தில் ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே புதிசு என்பதால் எனக்கு தீபாவளி ரொம்ப முக்கியமான பண்டிகையாவே இருந்தது. 


Spinney' s அருகில்
நாட்கள் ஏன் தான் இப்படி ஆமையாய் நகருகிறதோ என்று இருக்கும். ஒன்று ஒன்றாய் முளைக்கும் திடீர் பட்டாசுக் கடைகளுக்கு அடிக்கடி விசிட் செய்து நம்ம பட்ஜெட்-ல் எது எது அடங்கும் என்று பார்ப்பதே தனி சந்தோஷம் தான். சில வருடங்களில் டைலர் சொன்ன தேதியில் டிரஸ்-ஐ தராத  நேரங்களில் எனக்கிருந்த டென்சன் சொல்லி மாளாது .


அன்று நான் பட்ட கவலையை ஸ்பெக்ட்ரம் ஊழலில் பணம் அடித்தவர்கள் கூட
(எப்படி இவ்வளவு பணத்தையும் கடைசி வரை பாதுகாப்பது என்றுதான்) இன்று  பட்டிருக்கமாட்டார்கள். ஏண்டா பக்கத்தில் இருக்கும் ஆறுமுகம் டைலரிடம் கொடுன்னா கேட்காம டவுனில் கொண்டு கொடுத்தில்ல இனி அவன் உனக்கு பொங்கலுக்கு தான் கொடுக்கப் போறான் என்று என் அம்மா வேற வெறுப்பு ஏத்துவார்.  ஆறுமுகம் டைலர் எனும் தின்னை டெய்லரிடம் கொடுத்தெல்லாம் தைத்தால் அதை அதிகாரப்பூர்வ தீபாவளி சட்டை என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள். சட்டையில் இரண்டு பாக்கெட் வைத்து அதன் ப்ளாப்பில் K.Tex என்ற லேபில் இல்லாவிட்டால், இது செல்லாது செல்லாது என்று நண்பர்கள் சொல்லிவிடும் அபாயம் இருந்தது.

கல்லூரி பருவத்தில் அத்தனை பரபரப்புடன் இல்லை என்றாலும்  டைலரின் லேபிலுக்கு முக்கியத்துவம் குறையாமலே இருந்தது.

மன்கூல் எரியா தான்
CA படிக்கும் போது, அது தீபாவளி பொங்கல் இரண்டையும் ஒரே கல்லில் அடித்துப் போட்டது . தீபாவளி சமயத்தில் பரிட்சை , பொங்கல் சமயத்தில் ரிசல்ட் என்பதே காரணம். டிரஸ் விஷயத்தில் காம்பரமைஸ் செய்து கொள்ளக் கூடிய அளவுக்கு மனது சரியானதும், இடையிடையே டிரஸ் எடுக்குமளவுக்கு  பர்சேசிங் பவர் வந்ததும் தீபாவளியை சாதரானமா கடந்து போகும் பண்டிகையாகவே மாற்றிவிட்டது. சிறுவயதில் அடைந்த பரவசமோ எதிர்பார்ப்போ இல்லாமல் இந்தப் பண்டிகைகளை கொண்டாடுகிறோமே என்ற குறை மனதை அழுத்த, அந்த நினைப்புடனேயே கொண்டாடி வந்தேன்.



துபாய் வந்ததும் அதுவும் கூட இல்லாமல் எதோ ஒரு வொர்கிங் டேவில் வந்து போக ஆரம்பித்தது. பாரம்பரியத்தை விட வேணாமே என அதி காலையில்  எண்ணைக் குளியல் செய்துவிட்டு செல்வதுடன் சரி. பட்டாசு  வெடிக்கத் தடை என்பதால் மற்றவர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்களா என்பது கூட தெரிய வராது.
ஆனால் கடந்த ஒரிரு வருடங்களாக ஒரு மாற்றம். என் வீட்டின் அருகே பல பில்டிங்களில் வண்ன விளக்குகளால் அலங்கரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாளிதழ்கள் தீபாவளியை ரொம்ப நல்லா கவணிக்க ஆரம்பித்து விட்டது. பத்திரிக்கையை பிரித்தால் வங்கிகள் நகைக் கடைகள் டிபார்ட்மண்ட் ஸ்டோர்கள் என பலரின் தீபாவளி வாழ்த்து விளம்பரம் வருகிறது

சில வருடங்களாகவே பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கிருந்து வாங்கு வார்களோ தெரியாது.ஆனால் ராக்கெட், புஷ்வானம்,ஆயிரம்வாலா என வெளிப் படையாகவே அமர்களப் படுத்துகிறார்கள். துபாய் அரசு கொஞ்சம் லூசில் விட்டு இருப்பதாக உணர்ந்தாலும்,  கைப்புள்ளைய விட பயந்தவன்  என்பதால் நான் பட்டாசை தேடிப் போகவில்லை.


எனது வீட்டின் அருகே உள்ள சில பில்டிங்-ன் மின் விளக்கு அலங்காரங்களைப் போட்டோ எடுத்தேன்.அதைத் தான் இங்கே பார்கிறீர்கள்.தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்னதாகவே இவை தொடங்குவதால், எனக்குள் மீண்டும் தீபாவளி பற்றி பரபரப்பு தொற்ற ஆரம்பித்து விட்டது.  இந்தியாவில் பட்டுப்பாவடை வாங்கும் போது தீபாவளிக்கு என்று சொல்லி சொல்லி  என் மகளும் தீபாவளி பற்றி எதிர்பார்க்க ஆரம்பித்தாள். மீண்டும் 
தீபாவளியை எதிர்பார்த்து கொண்டாட ஆரம்பித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.








நிறைய படம் எடுத்துட்டேன்  அதான் இந்த பதிவு.


Saturday, 31 July 2010

குவாய் ஆறு தாய்லாந்து

தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-3

முந்திய பகுதிகளைக் கான இங்கே சொடுக்கவும்.
தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-1
தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் பகுதி-2

புலியை எப்படி இப்படி நாய்க் குட்டியை பழக்குவது போல் எப்படி பழக்கி வைத்திருக்கிறார்கள் எங்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. தூக்கத்துக்கு ஏதாவது மருந்து கொடுத்திருக்கலாம் என்று டூரிஸ்ட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த புத்த பிக்குவை ஒருவர் கேட்டே விட்டார்.

வைல்ட் அனிமலுக்கு drug கொடுத்தால் அது மேலும் மூர்க்கமாகத்தான் மாறும் என்றவர், புலிகள் இயல்பாகவே பகல் முழுதும் தூங்கி இரவில் வேட்டையாடும் என்றார். மேலும் சிறிய குட்டிகளாக இருக்கும் போதிருந்தே வேகவைத்த இறைச்சிதான் அவைகளுக்கு உணவாம். பொதுவாகவே அவை சோம்பேறிகள் என்றும் வயிற்றுக்கு உணவு கிடைத்துவிட்டால் போதும் பிறகு நடப்பதற்கே காசு கேட்கும் என்றார். சத்தத்தை கேட்டால் மிரளும் எனறும் அதற்காகவே சத்தம் செய்ய வேண்டாம் என்று டூரீஸ்ட்களை அறிவுறுத்துகிறோம் என்றார்.

சத்ததிற்காக ஐஸ் பெட்டியின் மூடியை பின்னால் இழுத்து
வருகிறார்கள்
மாலை நான்கு மணிக்கு டைகர் டெம்பிள் மூடும் நேரம் என்பதால் பார்வை யாளார்களை நடை பாதையிலிருந்து விலகி நிற்க சொல்லிவிட்டு ஒவ்வொரு புலியாக அதன் கொட்டடிக்கு கூட்டிக் கொண்டு சொல்கிறார்கள். அது ஒன்றும் அத்தனை சாதரானமான வேலை அல்ல, அவற்றை எழுப்பி நிற்கவைக்க தாரை தப்பட்டை முழங்குவது போல தகரங்களை வைத்து சத்தமெழுப்புகிறார்கள். அடித்துப் பிடித்து எழுந்தாலும் நடப்பேனா என்று அலும்பு செய்கின்றன. பகுதி ஒன்றில் வெளியாகியிருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டு அவற்றைக் கூட்டி செல்கிறார்கள் என்று தெரியும். வாலைப் பிடித்து திருகி , தேர் இழுப்பது போல் இழுத்து ஒரு பத்து அடி நடக்க வைத்த பின் தைரியமுள்ள(?!) டூரிஸ்ட்கள் அதன் பெல்ட்-ஐ பிடித்து கொண்டு மீதி தூரம் வரை நடக்க அனுமதிக்கிறார்கள். நான் கூட சிறிது தூரம் அவற்றுடன் நடந்தேன்.புலியை விட மிரட்டுகிற தோற்றம் எனது  என்பதால் மறுபடி மறுபடி என் படத்தை இனைப்பதை தவிர்த்திருக்கிறேன். சங்க கால தமிழ் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள் என்பார்களே அது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் ஆனால் புலிவாலைப் பிடித்த கதை என்பார்களே அதெல்லாம் சும்மா தானோ என்று தோன்றியது. அததனை நிதானமா நின்று யோசித்து யோசித்து  நடந்தன.

புலிக் கோவிலில் ஆங்காங்கே மினரல் வாட்டர்களை ஐஸ் நிறைந்த பெட்டிகளில் வைத்திருக்கிறார்கள். இலவசம் தான். சிறு குட்டிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தோம் ஆனால் மூடும் நேரம் என்பதால் எங்களை அங்கே அனுமதிக்கவில்லை.

கரை புரண்டு ஓடும் குவாய் ஆறு
நாங்கள் திரும்பி வந்த போது எங்கள் காரில் எங்களுடன் வந்த வெள்ளைக்காரர்களுடன் வேறு சிலர் உட்கார்ந்திருக்க, எங்கள் டிரைவர் தான் திரும்ப பாங்காக் செல்வதாக சொல்லி அங்கே புறப்படத்தயராக இருந்து வேறு ஒரு காரில் ஏற்றி, உங்களை சயோக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கும் ப்லோடிங் ஹவுஸ்-ல் கொண்டுவிடுவார்கள் என்றார். டூர் ஆப்ரேட்டர்கள் அங்கே குழுக்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் வண்டியில் இடமிருந்தால் மற்ற எந்தக் கம்பெனியின் பயணிகளையும் உடன் ஏற்றிக் கொள்கிறார்கள்.

தங்கமணி குழந்தைக்கு பால் வேண்டுமென்றார், டிரைவரிடம் எதோதோ சொல்லி புரியவைக்க முயன்றேன். ஹூம் … ஒன்றும் வேலைக்கு ஆவல. தாய்லாந்தில் பாங்காக் தவிர மற்ற இடங்களில் ஆங்கிலம் பேசி புரியவைக்க முடியாது என்று lonely planet புத்தகத்தில் படித்தது அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது. சாதரணமா புழங்கும் வார்த்தைகள் கூட தெரியாது “ஙே” என்று பார்த்தார்.


என்ன இது இப்படி கை மாற்றி விட்டுடானுகளே, அவர்கள் சொன்ன தரத்தில் ப்லோடிங் ஹவுஸ் இருக்குமா இருக்காதா என்ற ஆதார சந்தேகங்கள் மனதில் உறுத்த பயணித்தோம்.

இயற்கை வஞ்சனை இல்லாமல் வாரிவழங்கியிருக்கிறது. சாலையை விழுங்கிவிடட்டுமா என்று கேட்பது மாதிரி எங்கு பார்த்தாலும் ஆளுயர்ந்த மரங்கள் சாலையை கவ்விக் கொண்டு நின்றிருந்தது.

வழிநெடுக மிதக்கும் வீடுகள்
காஞ்சினபூரியிலிருந்து 20 கி.மீ. பயணித்து மலைப்பாங்கான சையோக் வாட்டர் பால்ஸ் ஏரியா வந்தடைந்தோம். சிறிய கடைவீதிப் பகுதியை கடந்து ஒரு மலை சரிவில் கார் இறங்கியது. கரைபுரண்ட வெள்ளமாய் ஒடும் குவாய் நதிக்கரை தென்பட்டது. நதிக்கரையை ஒட்டியே கார் ஓடியது. ஒரு கி.மீ-க்கு ஒன்று என ப்லோடிங் ஹவுஸ்கள் இருந்தன. தென்பட்ட படகு வீடுகள் தரமானதாகவே தோற்றமளித்ததால் நாம் தங்குமிடமும் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்தது.

Photo editor- ல் soft focus செய்தபடம்         From Online Edits


எங்கள் மிதக்கும் இல்லத்திற்கு 4.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே இருந்த மேனேஜருக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருந்தது ஆறுதலாக இருந்தது. நீங்க மட்டும் தான் வெஜிடேரியன் ஸ்பெசலா ஏற்பாடுஇ பன்ன சொல்லியிருக்கிறேன் என்றார். அந்த ஸ்பெசலுக்கு அப்போ அர்த்தம் விளங்கவில்லை. குவாய் ஆற்றில் மஞ்சளா அல்லது இளம்சிவப்பா என்று சொல்ல முடியாத நிறத்தில் தண்ணீர் ஒட்டிக் கொண்டிருந்தது. எட்டு வீடுகள் வரிசையாக மிதந்து கொண்டிருந்தன. ஒன்றுடன் ஒன்று  சிறு மரப்பாலத்தால் இனைக்கப் பட்டிருந்தது. எங்களுக்கு  எண் 6 ஒதுக்கப்படிருந்தது. மரப்பாலத்தை கடக்கும் போது தண்ணீர் செல்லும் வேகம் தெரிந்தது. அவர்கள் சொன்னபடியே 3 நட்சத்திர தரத்தில் வீடு இருந்தது. வீட்டிற்கு முன் இருக்கும் நடைபாதையில் இருந்த சேரில் வந்து அமர்ந்தோம். கரைபுரண்டு ஓடும் ஆற்றையும் மாலை நேர சூரியனை பார்த்த போதே , சே! இன்னும் ஒரிரு நாள் கூட தங்குவது போல் வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

எங்கள் அறைக்கு அடுத்த அறையில் இருந்த ஒரு வயதான அமெரிக்கக் குடும்பம் எங்களைப் போல் மூன்று நாட்கள் தங்க வந்தவர்கள் இந்தப் இடம்  பிடித்து போனதால்   20 நாட்களாக அங்கே தங்கியிருப்பதாக சொன்னார்கள். அறையும் வசதிகளும் திருப்திகரமாக இருந்தது. நாமும் இன்னமும் சில நாட்கள் தங்கினால் என்ன என்று தோன்றினாலும், எங்க பாப்பா திருப்தியாக இருந்தால் தான் உள்ள திட்டப்படியாவது ஊர் சுற்ற முடியும் என்பதால், பால் கிடைக்குமா என்று மேனேஜரிடம் கேட்க ரிஷப்ஷனுக்கு வந்தேன்.  முதல் வீடுதான் ரிஷப்ஷன், பார் டைனிங் ஹால் எல்லாம்.  பால் இல்லையென்றும் ஒரு கி.மீ தூரத்தில் ஒரு கடை இருக்கு போனா கிடைக்கும்  ”நாம்” என்று கேட்கனும் என்றார்.

ஆற்றங்கரை ஓரமாவே நடந்தேன். என்னைத் தவிர ஒரு ஈ காக்காய் கூட அந்த வழியில் தென்படவில்லை.  வழி நெடுக நார்த்தை மரங்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன. படகுத் துறையில் வாயிலில் அந்தக் கடை இருந்தது. டூரிஸ்ட்களுக்கு புத்தர் சிலையும் மற்ற கலைப் பொருள்களும் விற்கும் கடை கம் வீடு. மில்க் வேனும் என்றேன். அப்படீன்னா என்பது போல் பார்த்தார் கடைக்காரர்.  குழந்தைக்கு பால் என்று சைகையில் சொல்லிப் பார்த்தேன் வேலைக்கு ஆவல. உள்ளிருந்து அவர் மனைவி உதவிக்கு வந்தார், அவருக்கு ஒரளவு புரிய, சோயா மில்க் எடுத்து தந்தார். அதையும் நான் மறுக்க, எதோ புரிந்தவராக வீட்டிற்குல்சென்று இரு டெட்ரா பாக் மில்க எடுத்து வர, நான் துள்ளிக் குதிக்காத குறை. இதுக்கு பேரு “நாம்” என்றவர்கள் இதைக் கூட இவனுக்கு சொல்லத்ட் தெரியலையே என்பது போல் அவர்களுக்குள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

திரும்பி வரும் போது ஒரு நாயுடன் வயதான பெண் நடந்து வந்து கொண்டிருந்தார்.   நாயைப் பார்த்தால் அப்பிரானி மாதிரி தெரிந்தாலும், அது அவ்வப்போது என் அருகே வருவது என் கையில் என்ன என்பது போல் நோட்டம் இட்டதும் சற்றே பயத்தைக் கொடுத்தது. இவங்ககிட்ட ஒரு பால் வாங்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துட்டுதே , இதில நாய் கடிக்கு வைத்தியம் எல்லாம் பார்க்கனும்னா என்ன ஆகுமோ என்ற கவலை தான் காரனம்.
அந்த அம்மா சிரித்து கொண்டே என்னவோ நாயைக் கான்பித்து ”தாய்”ல் சொல்லியது. நாய் ஒன்னும் பன்னாது என்றதா இல்லை ஏம்பா ”உனக்கு பில்டிங் ஸ்டராங் ஆனா பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கு போலருக்கே என்றதா தெரியலை. லேசா இருள் சூழ தொடங்க மிதவை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.



திரும்பி வந்த நேரம் மேனேஜர் இல்லாததால் பாலைக் காய்ச்சி வாங்குவதற்குள் என் தாவு தீர்ந்து விட்டது.  அதற்குள் வெள்ளையர்களின் பார் களை கட்டியிருந்தது. பாருக்கு எதிரே ஆற்றில்  மூங்கில் மிதவையை (raft) கட்டி வைத்திருந்தார்கள். அதில் கொஞ்சம் வெள்ளைக்காரர்கள் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். மூங்கில் ராப்ட் பாதி தண்ணீரில் அமிழ்ந்து அமிழாமலும் இருந்தது.

ஆனால் வெஜிடேரியன் தாய் உனவு அவ்வளவு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.  சோயா சாஸ்-ல் எதையாவது மிதக்க விட்டு கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். டின்னர் வந்ததும் எது வெஜிடேரியன் என்றதற்கு,  ஒரு நூடுல்ஸ் ப்ளேட்-ஐ காட்டினார்கள்.  என்னப்பா சிக்கன் மிதக்கிற மாதிரி இருக்கே என்றேன் என்ன புரிந்ததோ வேற ஐட்டங்களாக காட்ட எல்லாத்திலும் வெஜிடபிள் தவிர மற்றது இருந்தது. மானேஜரை தேடினேன், மானஸ்தன் அகப்படவே இல்லை. குழந்தை அழும் போது சும்மா தான் அழும் யாராவது பாப்பாவுக்கு என்னாச்சு என்றதும் கேவிக் கேவி அழுமே அது போல பக்கத்தில வாங்கி சாப்பிட கூட வழியில்லாது காட்டிற்குள் இருக்கிறமே என்ற நினைப்பு பசியை இரட்டிப்பாக்கியது. நாங்கள் ஏதும் சாப்பிடதாது கண்டு கிச்சனில் இருந்த ஒரு வயதான அம்மா என்னா மேட்டர் என்றது. மறுபடியும் முதல்ல இருந்தா என்று என்று எல்லா இஷ்ட தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு சொல்ல, அந்தம்மாவுக்கு புரிந்தே விட்டது. அவசர அவசரமாய் வெஜிடெபிள் நூட்டுல்சு பண்னி எடுத்து வந்தது. பசிக்கு உணவு தருவது போன்ற உன்னதம் இந்த உலகில் வேறு இல்லை என்று அன்று புரிந்தது.

Tuesday, 29 June 2010

சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது

ஒரே நாளில் சென்செக்ஸ் 600 பாயிண்ட்கள் சரிந்தது என்றெல்லாம் நியூஸ்-ல் கேட்டு இருப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இருக்கிறதோ இல்லையோ சென்செக்ஸ் என்கிற வார்த்தையை ஒரு நாளில் ஒரு முறையேனும் நீங்கள் கேட்காமல் இருக்க முடியாது. இந்தக் குறியீடு பங்கு சந்தையின் நிலையை அறியும் தெர்மா மீட்டர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிய வாய்பில்லை. அதை விளக்கவே இந்தப் பதிவு.



1986 வருடம் தான் முதல் முதல் 1978-79 -ஐ base year (100 பாயிண்ட்ஸ்) ஆக வைத்து இந்த index கணக்கிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தைக் குறிக்க எந்தக் குறியீடும் இல்லாமல் தான் இருந்தது.

இந்த சென்செக்ஸ் , BSE-ல் லிஸ்ட் செய்யப்பட்ட தரமான 30 பல்வேறு துறைகளின் விலை ஏற்ற இறக்கத்தை வைத்து, Free Float Market Capitalisation முறையில் கணக்கிடப்படுகிறது. ( குறிப்பு: இந்த கணக்கிடும் முறை மாற்றத்திற்கு உட்பட்டது, இப்போதைய முறை 2003-ல் வருடத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது 1986 -2003 வரை Full Market Capitalisation வழக்கத்தில் இருந்தது )


ஆமா அது என்ன Free Float Market Capitalisation ? முதலில் Market Capitalisation என்றால் என்ன என்று பார்போம்.

அந்தக் கம்பெனி வெளியுட்டுள்ள ஷேர்களின் தற்போதைய மார்கெட் மதிப்பே மர்கெட் காப்பிடலைஸேஷேன் என்றழைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு KSB Pumps- வெளியிட்டுள்ள மொத்த ஷேர்கள் 1.7403 cores (Issued Capital) ஒரு ஷேரின் மார்கெட் மதிப்பு Rs.490

KSB Pumps-ன் மார்கெட் காபிடலைஸேஷன் = 1.7403 x Rs.490 = 852.79 Crores

( No.of Outstanding Shares multiplied by the market value of the Share)

இந்த "Mrkt.Cap"-மதிப்பை வைத்தே அவை லார்ஜ் கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால் கேப் என்றெல்லாம் வகைப் படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு கம்பெனி வெளியிட்டுள்ள அத்தனை ஷேர்களும் ஒப்பன் மார்கெட்டில் டிரேட் ஆகிக் கொண்டிருக்காது. ப்ரோமோட்டர்கள் நிர்வாகிகள் வசம் இருக்கும் "controlling interest" ஷேர்கள் சில, FDI- கள் (Foreign Direct Investors)வசம் சில , அரசாங்கத்தின் கையில் (Promoter/acquirer)என்று இருப்பவை தவிர்த்து மார்கெட்டில் எல்லோராலும் தடையின்றி வாங்கி விற்கப்படும் ஷேர்களே அந்தக் கம்பெனியின் ஃப்ரீ ப்லோட். இதன் மார்கெட் மதிப்பே ஃப்ரீப்லோட் மார்கெட் காப்பிடல் ஆகும்.( இதை சதவிகிதமா சொல்லும் போது அது free float factor எனப்படும்).
இப்ப நமக்கு பேஸிக் டெர்மினாலாஜி எல்லாம் தெரிஞ்சாச்சு , இனி எப்படி சென்செக்ஸ்- கணக்கிடுவதென்று பார்க்கலாம்

1. இந்த கணக்கீட்டுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் 30 ஷேர்களின் Free Float Market Cap-ஐ கண்டுபிடிக்கனும்.

2.Free Float Market Cap-அத்தனையையும் கூட்ட வேண்டும்

3 அந்தக் கூட்டுத் தொகையை base year (1978-79 base value=100 சென்செக்ஸ் பாயிண்ட்ஸ்)-க்கு ஒப்பிடக்கூடிய வகையில் சமன் படுத்துவதே சென்செக்ஸ் மதிப்பீடு ஆகும் இந்த மூன்றாவது கொஞ்சம் புரியாதது போல இருக்கும். இது எப்படி என்பதை கடைசியில் பார்போம். இனி சென்செக்ஸ்


30 கம்பெனிகளின் நேற்றைய Free Float Market Cap = 320000கோடிகள் நேற்றைய சென்செக்ஸ் = 16000 பாயிண்ட்கள்

30 கம்பெனிகளின் இன்றைய Free Float Market Cap = 336000 கோடிகள் என்றால் இன்றைய சென்செக்ஸ் குறியீடு எவ்வளவு

நேற்று நிலவரப்படி 20 கோடிக்கு ஒரு பாயிண்ட் என்றால் இன்றைக்கு எத்தனை பாயிண்ட்

320000/16000 =20 ( இதற்கு index divisor என்று பெயர்)

336000/20 =16800 பாயிண்ட்கள்

Base year ( 1978-79 base value=100 சென்செக்ஸ் பாயிண்ட்ஸ்)-க்கு ஒப்பிடக்கூடிய வகையில் சமன் படுத்துவது ஏன்றால் என்ன ?ஒரு சின்ன உதாரனத்தை வச்சுக்கிட்டு பார்த்தா கொஞ்சம் புரியும்
1978-79 ஆம் வருடம் மார்ச் 31ம் தேதி மாலை டிரேடிங் முடிந்ததும், 30கம்பெனிகளின் Free Float Market Cap ரூ 60,000 என்று வைத்துக் கொண்டு அன்றைய தினத்தின் சென்செக்ஸ் 100 என்று குறித்திருந்தோமேயானால் அந்தக் கம்பெனிகளின் 1986-ம் வருட Free Float Market Cap =840,000 என்றால் 1986-ல் இந்தக் கம்பெனிகளின் சென்செக்ஸ் கீழ்கண்டவாறு கணக்கிட்டு இருப்பார்கள்

60000/100 =600 (index divisor )

1986-ம் வருட Free Float Market Cap =840,000 /600 =1400 பாயிண்ட்ஸ்

ஒவ்வொரு நாளுக்கும் Free Float Market Cap கணக்கிடப்பட்டு index divisor (Index divisor = Previous F.F.M.Cap/ Previous Sensex point) ஆல் வகுக்க புதிய சென்செக்ஸ் கிடைக்கிறது. இந்த 1400 தான் இப்படி 16800 பாயிண்ட்களாக வளர்ந்து நிற்கிறது.


அதெல்லாம் சரி எப்படி அந்த 30 ஷேர்களை தேர்வு செய்கிறார்கள்?
என்ன என்ன கம்பெனி ஷேர்கள் அதில் இடம் பிடித்திருக்கிறது என்பது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

மேலதிக விபரங்கள் தெரிய http://www.bseindia.com/ வலைத்தளத்தில் அறியலாம்.